புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலுடன் நேரில் பேசி முடிவு கட்ட சம்பந்தன் தீர்மானம்!

ரணிலுடன் நேரில் பேசி முடிவு கட்ட சம்பந்தன் தீர்மானம்!

1 minutes read

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை இனவாத மயப்படுத்தி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார ஆயுதமாக அதைப் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய அரசியல் தந்திரோபாய முயற்சிக்கு இடமேயளிப்பதில்லை என்று தீர்க்கமாக முடிவுகட்டி இருக்கும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரடியாகத் தனித்துச் சந்தித்துப் பேசி, ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டாக’ அவரிடம் தமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தவும் தீர்மானித்திருக்கின்றார் என்று அறியவருகின்றது.

இதற்காக அடுத்து வரும் தினங்களில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் நடவடிக்கை எடுக்கின்றார் என்று கூறப்பட்டது.

தமது வயோதிபம் கருதி இந்தச் சந்திப்புக்கு அவர் தம்முடன் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை வழமை போல் உதவிக்கு அழைத்துச் செல்வார் என்றும் தெரிகின்றது.

மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே 13 ஆம் திருத்தம் மூலம் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கவும் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், 2016 முதல் 2019 வரை நல்லாட்சி அரசின் காலத்தில் அச்சமயம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் தீர்வுக்கான வழிவகைகள் தொடர்பாகத் தமிழர் தரப்பு ஏற்கனவே விரிவாகப் பேசி, காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கும் பூர்வாங்க இணக்கமும் கண்டுள்ளது. அந்த அதிகாரப் பரவலாக்கல் திட்டத்துக்குப் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவிலும், அரசமைப்புப் பேரவையாக இயங்கிய நாடாளுமன்றத்திலும் கூட முழு அளவில் அடிப்படை இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில், இப்போது வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தும் ஒரே குறுகிய நோக்கத்துக்காக, ஏற்கனவே அரசமைப்பில் இருக்கும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காமல் தவிர்க்கும் பேரினவாத மேலாண்மைத் திட்டம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென முன்வைத்து, புதிய இனவாத அரசியல் குழப்பங்களை உருவாக்குகின்றார் என்று கருதும் சம்பந்தன், ஜனாதிபதியின் அந்தப் போக்குக் குறித்துக் கடும் சீற்றத்தில் இருக்கின்றார் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

இந்தப் போக்கு, தமிழர் தரப்பிடம் வேகாது என்று ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டாக’ நேரடியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைக்கவும், இந்தக் குழப்பப் போக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தால், 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை இழந்து, அதனால் வெற்றி வாய்ப்பைக் கோட்டைவிட்ட அதே துரதிர்ஷ்ட நிலைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2024 இலும் மீண்டும் ஏற்படும் என்று எச்சரிக்கவுமே அவரை நேரில் சந்திக்க சம்பந்தன் விரும்புகின்றார் என்று தெரிகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More