அசிங்கம் துப்பிய சந்தேக எச்சிலைக் கொட்டுகிறாய்
நானோ வியர் நிறைத்த பெருங்குடலிலிருந்து ஏப்பம் இறைக்கிறேன்
எது நிறைவு அன்பே
நீ ஒரு மோகனப் புன்னகை தருவாய்
அதுதான் உயர்ரக பொன்னகையென எழுதி வைத்து ஆனந்தித்தேன்
நீயோ பெற்றோலுக்கலையும் முதலாளித்துவம் போல் பொன்னுக்கு போகமானாயே
உன் மடிதான் என் ஆறுதல்ப் பெருவெளி என்றிருந்தேன்
நீ மாபிளின் மாளிகைமீது மசோதா தயாரித்து உன்னை உயர்த்தினாய்
நீயும் நானும் தெருவெல்லாம் சண்டையிட்டாலென்ன
சந்தேகித்தாலென்ன
சந்தோசித்தாலென்ன
அது நம் காதல் சங்கதி
ஆனால் நீயோ இன்று துரோகிகளுடன் கூட்டுச் சென்று குருந்தூர் மலை புத்தர் போல
என் மான அறை எங்கிலும் அன்பில்லாமல் ஆக்கிரமித்துவிட்டாயே
எனக்கொன்று புரியவில்லை பெண்ணே
அன்பில்லாமல்
சிங்களன் தமிழன் சண்டை போல் வீழப்போகிறோமா
துரோகத்தின் துருப்பிடித்த அறியாமையால் அலங்கோலப்படுவோமா
காலம் நம்பக்கமென்றால்
ஈழம் போல்
கனவையேனும் சுமப்போம்
நமது காதலும்
தமிழீழக் கனவும் துரோகத்தால் நிறைந்த தூய பூக்களாக மாதிரிக்கென்றாலும் பூத்துக் குலுங்கட்டும்
ஆறுதலுக்கு சொற்ப புன்னகையும் லட்சம் கண்ணீரையும் இறைத்து நிறைவேகலாமல்லவா
த.செல்வா
இரவு 11.56