மூதூரில் இன ரீதியாக படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களை நினைவுகூரும் 17வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு பிரான்ஸ், கிளிச்சி பகுதியில் அமைந்துள்ள உயிர் நீத்த பணியாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்னால் இடம்பெற்றது.
இந்த நினைவுகூரல் நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்ஸ் கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
நினைவுகூரலின் தொடக்கத்தில் கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க பொருளாளர் கண்ணதாசன் பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனையடுத்து, உயிரிழந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளியின் சகோதரி ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்
பின்னர், நினைவுத்தூபிக்கு கிளிச்சி தமிழ்ச்சோலை நிர்வாகி சுபத்திரா ரவிச்சந்திரன் மலர் தூவி அக வணக்கம் செலுத்த, தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர், கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் க.சச்சிதானந்தம், பிரெஞ்சு மொழியில் கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவி ரபிசா ரவிச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்த 17 பணியாளர்கள் தொடர்பில் நினைவுரை ஆற்றினர்.