தாய்வானில் குவிக்கப்படும் அமெரிக்கா ஆயுதங்கள் !
சீனாவை சினங்கொள்ள வைக்கும் பாரிய இராணுவ உதவிகள்
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக தாய்வானை கைப்பற்றுவோம் என்று அண்மையில் சீனா தெரிவித்துள்ள நிலையிலே, தாய்வானுக்கு அமெரிக்கா சுமார் 345 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவியினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சீனா மற்றும் தாய்வான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தற்போது தாய்வான்
தெரிவித்துள்ளது.
தாய்வான் இறையாண்மை :
தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை உள்ள நாடாகதான் கருதுகிறது. ஆனால் சீனா தாய்வானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கிறது. வலுக்கட்டாயமாக தாய்வானை தனது நாட்டுடன் ஒன்றுசேர்க்கும் வாய்ப்பு இருப்பதை சீனா நிராகரிக்கவில்லை. சீனா மற்றும் தாய்வான் இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லையை கடப்பதை தாய்வான் ஊடுறுவலாகதான் பார்க்கிறது. சீனா 2025ஆம் ஆண்டிற்குள் தாய்வானை முழுவதுமாக கைப்பற்றி விடும் என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது.
தற்போதய அமெரிக்காவின் இராணுவ உதவியில் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகள் மற்றும் சிறிய ஆயுத வெடிமருந்துகள் என்பன அடங்குவதாகவும், குறித்த உதவியை விரைவில் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக, எதிர்காலத்தில் தன் நாட்டிற்கெதிராக நிகழ்த்தப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தாய்வான் தடுக்க முடியும் என அமெரிக்க இராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதனாலேயே அமெரிக்கா இந்த இராணுவ உதவிகளை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நீண்ட கால திட்டமிடலாக, சொந்த இராணுவ இருப்பை நிலைநிறுத்த
ரஷ்யாவிற்கெதிரான, உக்ரைனின் போராட்டத்தின் போது அமெரிக்கா உக்ரைனிற்கு அவசரகால உதவியாக இராணுவ தளபாடங்களை இராணுவ அமைச்சகம் வழங்கியது போலவே இப்போது தாய்வானிற்கும் உதவுகின்றது.
அமெரிக்க அதிபரின் ட்ரோடௌன் ஒதோறட்டி (drawdown authority) என்ற உத்தரவின் வாயிலாகவே அமெரிக்கா இந்த உதவியினை வழங்குகிறது. இந்த தளபாடங்கள் அனைத்தும் அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கிழக்காசியாவிலுள்ள நாடுகளில் ஜனநாயக நாடாக விளங்குகின்ற தாய்வானை, தனது தேசத்தின் ஒரு பகுதியாக சீனா அறிவித்துள்ளது.
ஆனால் தாய்வான் இந்த முடிவிற்கு தனது எதிர்ப்புக்களையே வழங்கி வருகிறது. இந்த நிலையில் தேவையேற்படின் இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக கூட தாய்வானை கைப்பற்றுவோம் என்று சீனா கூறுகின்றது.
கடந்த ஆண்டு 2022இல் சீன இராணுவம் தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் இரு பெரிய இராணுவ பயிற்சிகளை நடத்தியதன் போதே தாய்வான் தீவின் முற்றுகையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிற்கு இடையேயும் பதற்றமான சூழல் உருவாகியது.
சீனாவில் இருந்து பிரிந்த தாய்வான்:
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தாய்வான் பிரிவு ஏற்பட்டது. மாவோ தலைமையில்
கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.
தாய்வானுக்கு தப்பியோடிய பிறகு, சியாங் காய்-ஷேக் கோமின்டாங் கட்சியை வழிநடத்தினார்
தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தாய்வானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இப்போது, தாய்வானை இறையாண்மை கொண்ட நாடாக வத்திக்கனும், வேறு 13 நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கின்றன. தாய்வானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.
பொருளாதார வளர்ச்சியில் தாய்வான் :
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாய்வான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது. தாய்வான் “நான்கு ஆசிய புலிகள்”‘ எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.
இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவானில் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம், பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
சுதந்திர நாடாக அறிவிக்குமா ?
அத்துடன் தனி அரசியலமைப்புச் சட்டம், ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு தனி நாடாக தாய்வான் பறைசாற்றிக் கொள்கிறது.
ஆயினும் தாய்வானை எளிதில் வீழ்த்தக் கூடிய பிராந்தியமாகப் பார்க்கிறது சீனா.
தாய்வான் அரசு, அந்த நாட்டை ஒரு சுதந்திர நாடாக ஒரு முறைப்படி அறிவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து சீனா கண்டனம் கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
தாய்வானில் கொட்டப்படும் அமெரிக்கா ஆயுதங்களால் சீனா பெரும் சினங்்கொண்டுள்ளது.
இத்தகைய பாரிய இராணுவ உதவியால் அதிகரிக்கும் பதற்ற சூழ்நிலை இலகுவில் தணியாது. உக்ரேனிய யுத்தம் முன்பாகவும் இத்தகைய படைபல விஸ்தரிப்பால் போர் மூண்டது….