டுபாயில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வியாபாரம் செய்யும், கப்பம் அறவிடும், கொலைகள் புரியும் இலங்கையின் பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அந்நாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பொலிஸ் திணைக்களமும் சட்டம், ஒழுங்கு அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
34 பாதாளக் குழு உறுப்பினர்கள் டுபாயில் இருந்துகொண்டு இலங்கையில் பல குற்றச் செயல்களைப் புரிந்து வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, இலங்கை வர்த்தகர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு செயற்படுவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இலங்கை வர்த்தகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்தே மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில் கப்பம் கோரும் டுபாயில் பதுங்கியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.