எம்முடைய மண்ணில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் இசைக்கலைஞரான சாந்தரூபி (அம்பாளுக்கடியாள்) பாடல் எழுதி, இசையமைத்து, பாடிய ‘என்னுயிர் கீதங்கள் 50’ எனும் இசை அல்பத்தை, தமிழ் திரையலகின் மூத்த இயக்குநரும், சர்வதேச தமிழர்களிடையே பிரபலமானவருமான கே. பாக்யராஜ் சிறப்பு அதிதியாக பங்குபற்றி வெளியிட்டார்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக இசை அல்ப வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பேரரசு, செந்தில்நாதன், ராசி அழகப்பன், இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன், ஏ.ஆர்.ரெஹானா, விஜய் ரிவி புகழ் பாடகர் மூக்குத்தி முருகன், கண்ணதாசன் பதிப்பகம் நிறுவனர் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் ஜோன் தன்ராஜ் , கம்பம் குணா உள்ளிட்ட பலர் அதிதிகளாக பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் பாடலாசிரியையும், பாடகியும், இசையமைப்பாளருமான சாந்தரூபி (அம்பாளுக்கடியாள்) பேசுகையில், ” ஐரோப்பிய தேசத்தில் வாழ்ந்த போதும் எம்மை வாழ வைப்பது தமிழ். எம்முடைய உணர்வுகளை எப்போதும் கடந்து செல்ல இயலாது.
எங்களுடைய உணர்வு வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்று எண்ணுகிறோம். அனைத்தையும் பாடலாக வடிவமைத்திருக்கிறேன். இன்னும் இன்னும் பாடல்களை என் வாழ்நாள் முழுவதும் பாடல்களைப் படைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
அதிலும் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மை அளிக்கும் பாடல்களை மட்டுமே படைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். எம்முடைய தந்தையார், மாமன், உறவினர்கள்.. என அனைவரும் அனுசரணையாக இருந்தனர். எம்மை வளர்த்தெடுத்த இந்த தமிழ் சமூகங்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் நன்றி பாராட்டுகிறேன். ” என்றார்.
இதனிடையே சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழச்சியான கவிஞர் ‘சாந்தரூபி (அம்பாளடியாள்),. ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம்” என்கிறார். இவர் பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.