விஜய் நடித்த, கான்ட்ராக்டர் நேசமணியாக வடிவேலு சிரிக்க வைத்த ‘ப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் சித்திக் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இரவு 9.10 மணிக்கு மாரடைப்பு காரணமாக தனது 63ஆவது வயதில் காலமானார்.
மலையாள இயக்குநரான இவர் தமிழில் விஜய், சூர்யா, விஜயகாந்த், வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் பகத் பாசிலின் தந்தையும் பிரபல இயக்குநருமான பாசிலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், 1989ஆம் ஆண்டு பாசிலின் தயாரிப்பில் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற மலையாள திரைப்படத்தை முதல் முறையாக இயக்கினார்.
தொடர்ந்து, ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர் போன்ற படங்களை இயக்கியதையடுத்து, தமிழிலும் ‘ப்ரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’, ‘சாது மிரண்டா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற திரைப்படங்களை இயக்கி பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இவர் அண்மையில் சிறுநீரக பிரச்சினையால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.