தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியாகும் தகவலைப் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான செய்தி நகைப்புக்குரியது என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேர்ணல் நலின் ஹேரத் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், அவர்களைத் தான் நேரில் சந்தித்தார் எனவும் மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண்ணொருவர் சமூகவலைத்தளங்களில் காணொளியொன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலானது.
“நெடுமாறனுக்குப் பிறகு இதோ அக்கா வந்துவிட்டார்” என விமர்சன ரீதியிலான பதிவுகள்கூட குறித்த காணொளி தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்தன.
மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதுவொரு நாடகம் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.