நிறைவுப்புள்ளி
பறக்கிறது
ஒரு சிட்டுக்குருவி…
பிடுங்கப்பட்டுக் கீழே கிடக்கும்
தன் இறக்கைகளைச் சுற்றி…
விடைகளால் சூழப்பட்டும்..
வினாக்கள் ஏதுமின்றி விலகி நகர்கின்றன
சில விம்பங்கள்…
கரைகளைக் கழுவிச்செல்லும்
கடலலைகள் – கால்த்
தடங்களையும் கரைத்துச் செல்கின்றன…
அவற்றின் அனுமதியின்றி….
புள்ளிகளிட்டு
நீட்டிட விரும்பாமல் இடப்படுகிறது
ஒரு புள்ளி
நீண்டு விரியும் தொடர்கதையின் இறுதிப்பக்கத்தில்….
ஒற்றை விண்மீன்
நினைவுச் சுரங்கங்கள்
ஆழத் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தன
இருள் கவிந்திருந்த
இராப்பொழுதில்…
மௌனித்து உறங்கிக்கொண்டிருந்த
நினைவலைகள்
ஒவ்வொன்றும் மெல்லத்
துயில் கலைந்து எழுந்தன
மனஇடுக்குகளின் ஓரத்திலிருந்து…
அலைபேசி சுமந்து
வந்த அவ் உரையாடல் கேட்பதற்காய்…
சலனமற்ற வான் வெளியில் இமைகொட்டாமல்
விழித்து நின்றது
ஓர்
ஒற்றை விண்மீன்.
சுடர்நிலா