கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் புதன்கிழமை ஆரம்பமான 48ஆவது இலங்கை பாடசாலைகள் நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் 28 வருட சாதனை உட்பட இரண்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.
இந்த இரண்டு புதிய சாதனைகளும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் போட்டிகளில் நிலைநாட்டப்பட்டது.
கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியின் முன்னாள் வீரர் கிஹான் ரணதுங்க 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100 மீற்றர் சாதாரண (Free Style) நீச்சல் போட்டியில் 28 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டியிருந்த சாதனையை பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி மாணவன் ஏ. ஐ. எம். ஹாதிம் முறியடித்து வரலாறு படைத்தார்.
ஹாதிம், 100 மீற்றர் சாதாரண நீச்சலை 1 நிமிடம் 02.98 செக்கன்களில் நீந்திக் கடந்து புதிய சாதனையை படைத்தார்.
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியை 4 நிமிடங்கள் 49.98 செக்கன்களில் நீந்திக்கடந்த கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி வீரர் வை. மல்லவ ஆரச்சி புதிய சாதனையை நிலைநாட்டினார்.
வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் முன்னாள் வீரர் அம்ஜாத் ஹசன் 2016இல் ஏற்படுத்திய 4 நிமிடங்கள் 50.36 செக்கன்கள் என்ற சாதனையை மல்லவ ஆராச்சி புதுப்பித்துள்ளார்.
ஆரம்ப நாளன்று நிறைவுபெற்ற 8 போட்டி முடிவுகளின் அடிப்படையில் சிறுவர்கள் பிரிவில் புனித சூசையப்பர் கல்லூரி 82 புள்ளிகளுடன் 1ஆம் இடத்திலும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 31 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.
சிறுமிகள் பிரிவில் விசாகா வித்தியாலயம் 27 புள்ளிகளுடன் 1ஆம் இடத்திலும் பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை 24 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.
இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நீர்நிலை விளையாட்டுப் போட்டிகளுக்கு (நீச்சல் மற்றும் டைவிங்) மைலோ அனுசரணை வழங்குகிறது.
30ஆவது இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழாவில் நெஸ்லே லங்கா பிஎல்சி பால்மா பிரிவு பணிப்பாளர் ருவன் வெலிகல, நெஸ்லே லங்கா பிஎல்சி கூட்டாண்மை மற்றும் ஒழுங்குபடுத்தல் விடயங்களுக்கு பொறுப்பான உதவித் தலைவர் பந்துல எகொடகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன் நெஸ்லே லங்கா பிஎல்சி செயற்பாடுகள் சிரேஷ்ட முகாமையாளர் சஞ்சீவ விக்ரமசிங்க, இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத் தலைவி சாந்தனி உடுகும்புர, போட்டி மேற்பார்வையாளர் க்ரிஷான் துமிந்த ஆகியோரும் ஆரம்ப விழாவில் கலந்து சிறப்பித்தனர்.