முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாளக் கண்டனப் போராட்டத்தில் வடக்கு, கிழக்குச் சட்டத்தரணிகள் இன்று ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குப் முன்பாக இந்தக் கண்டனப் போராட்டத்தைச் சட்டத்தரணிகள் முன்னெடுத்தனர்.
இதன்போது நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படுவதுடன், நீதித்துறையில் கடமையாற்றுகின்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகளால் வலியுறுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலும் ஆற்றிய உரையைக் கண்டித்து நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாளக் கண்டனப் போராட்டத்தை மேற்கொள்வதென முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதானத் தீர்மானம் எடுத்திருந்தது. அத்தோடு குறித்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய சட்டத்தரணிகள் சங்கங்களுக்கும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பும் விடுத்திருந்தது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாளக் கண்டனப் போராட்டத்தை முல்லைத்தீவு நீதிமன்றத்தின் முன்பாக மேற்கொண்டனர்.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்கத்தினர் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து தத்தமது நீதிமன்றங்களுக்கு முன்பாக அடையாளக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், “இனவாதம் பேசி நீதித்துறை சுதந்திரத்தை அழைக்காதே”, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்குத் தடையேற்படுத்தாதே”, “தலையிடாதே தலையிடாதே நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே”, சுயாதீன நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள், “நாடாளுமன்றச் சிறப்புரிமையைத் துஷ்பிரயோகம் செய்யாதே”, “நீதித்துறையின் சுதந்திரத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தாதே”, “நீதித்துறை சுதந்திரம் ஓங்குக”, “கௌரவ நீதிபதிகளை அவபதிக்காதே”, “கௌரவ நீதிபதிகளின் கட்டளைக்கு மதிப்பளி”, “கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாதைகளைத் தாங்கி நின்றனர்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தொடர்ந்தும் முல்லைத்தீவு நீதிபதியை அவமதிக்கும் வகையிலும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் செயற்படுவது கண்டனத்துக்குரியது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய, சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில், நீதிபதியின் தனிப்பட்ட சுயாதீனத் தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், சரத் வீரசேகரவின் கருத்து நீதித்துறைக்கு ஏற்பட்ட பாரிய அவமானம் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு சிறப்புரிமையைத் துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் நாடாளுமன்றாலும், சபாநாயகராலும் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, நீதித்துறையில் இருக்கின்ற குருந்தூர்மலை தொடர்பான வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு காலத்துக்குக் காலம், கட்டளைகள் நடைமுறைப்பட்டு வந்துள்ளதைச் சட்டத்தரணிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.