யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்து கத்தியைக் காட்டி கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு – பாற்பண்ணைப் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாற்பண்ணைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு நேரம் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள் இறங்கிய மூவர் அடங்கிய முகமூடிக் கொள்ளைக் கும்பல், வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்து கழுத்தில் கத்தியை வைத்து “நகைகள் எங்கே?” என மிரட்டி கொள்ளையிட முயற்சித்துள்ளது.
அவ்வேளை வீட்டின் உரிமையாளர் அபாயக் குரல் எழுப்பியதையடுத்து, அயல் வீட்டார்கள் தமது மின் விளக்குகளை ஒளிர விட்டனர். அதனை அவதானித்த கொள்ளைக் கும்பல், தாம் கொண்டு வந்திருந்த பெரிய கத்தி ஒன்றையும் வீட்டில் கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் இந்த வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த முகமூடிக் கொள்ளைக் கும்பல், பாதிரியாரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரின் 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.