“ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் தாய் வீடு திரும்ப வேண்டும். பிளவு ஏற்பட்டுச் சென்றவர்களை மீள இணைப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.”
– இவ்வாறு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார, ஹரிசன் ஆகியோர் மீண்டும் கட்சிக்குள் வந்துள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது. கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் தாய் வீட்டுக்கு வாருங்கள். எவரையும் ஐக்கிய தேசியக் கட்சி வெளியேற்றவில்லை. அவர்களாகவே சென்றார்கள். எனவே, மீண்டும் வருவதில் பிரச்சினை இருக்காது.
சிலர் கறுப்பை வெள்ளையாக்கி பிரசாரம் செய்தனர். இதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாக்கம் ஏற்பட்டது. வாக்காளர்கள் நடுநிலை வகித்தனர். ஆனால், இன்று யதார்த்தம் புரிந்துள்ளது, அது வெள்ளை அல்ல கறுப்புத்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கட்சியைப் பலப்படுத்த வேண்டும். பிளவுபட்டுள்ளவர்களை இணைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.