சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றிருந்த நிலையில், அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையகப் பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், நாளை (01) காலை இலங்கை வருகின்றார்.
நாளை அதிகாலை 4.20 மணிக்கு அவர் இலங்கை வருவார் எனவும், அவரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் சரஸ்வதியை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்கள் தெரிவித்தனர்.
சரஸ்வதி தொடர்பான செய்தியை ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன.
சரஸ்வதி, இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வறுமை காரணமாக கடந்த ஜுலை 15 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
அவர் வேலைசெய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார் எனவும், உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை எனவும் தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கண்ணீர்மல்க சரஸ்வதி இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் அழுது புலம்பும் காட்சி விழிநீரை பெருக்கெடுக்க வைக்குமளவுக்கு அமைந்திருந்தது.
இது தொடர்பான காணொளி வெளியான பின்னர், அவரை வேலைக்கு அனுப்பிய முகவர்கள், சவூதியில் உள்ள தமது நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறிதொரு வீட்டில் வேலை பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும், தான் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சரஸ்வதி கூறியுள்ளார். இதன்படி அவருக்கான விமான ரிக்கெட்டும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை இலங்கையில் அவர் இருப்பார்.