சர்வதேசத் தேங்காய் தினம் ( world coconut day ) ஆண்டுதோறும் செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப் படுகிறது. இலங்கை ,இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில்தான் செப்டம்பர் 2 ஆம் திகதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.
வரலாறு அறிய முடியா பழமை கொண்டது தேங்காய். விஞ்ஞானிகள் தெற்கு பசிபிக் பகுதியான நியூ கினியாவில் இருந்து, கடலில் மிதந்து வந்த தேங்காய்களே இந்திய பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை பகுதிகளில் தென்னை பரவ காரணம் என யூகித்திருக்கிறார்கள்கள்.
தேங்காய்க்கு ‘கோகோநட்’ என்ற பெயரைச் சூட்டியவர் வாஸ்கோடகாமா. உலகம் சுற்றிய அவர் தேங்காய்களை இங்கிலாந்திற்கு அறிமுகம் செய்தார். அவர் அதற்கு ‘கோகோ’ என்று பெயர் வழங்கியிருந்தார். அந்த ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு ‘மூடிய முகம்’ என்று பொருள். அது பருப்பு வகையுடையதாக விளங்கியதால் பிற்காலத்தில் ‘நட்’ என்ற பிற்சேர்க்கையும் இணைந்து கோகோநட் என்று வழங்கப்பட்டது.
‘பூலோக கற்பகத்தரு’ என்று பனை மரம் போற்றப்பட்டாலும், உலகின் நிஜ கற்பகத் தருவாக விளங்குவது தென்னைதான். உலகம் முழுக்க பரவலாக விளைவது மட்டுமல்லாமல் பனைபோலவே அனைத்துப் பாகங்களையும் பயன்பாட்டிற்குத் தந்து உலகை இளைப்பாற செய்கிறது தென்னை. இயற்கை பானமான இளநீர் தொடங்கி, தென்னையின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது என பல தேவைகளுக்கு உதவுகின்றது.
தேங்காயின் பலன்கள்:
தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.
தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.
சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.
முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.
இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.
தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.
பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை.
வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.