இறந்து போன முன்னோர் களுக்கு பிதிர்க் கடன் செய்து ஆடி அமாவாசையில் தன் நன்றியை செலுத்துவது இந்துக்களின் மத அனுட்டானங்களில் ஒன்று, தம் முன்னோர்கள் தூல வடிவில் இல்லாவிட்டாலும் சூக்கும வடிவில் இருக் கிறார்கள் எனவும் அவர் களோடு உரையாட முடியும் எனவும் பூரணமாக நம்பி, அவர்களை வரவழைத்து உரையாடுகின்றார்கள் இன்னொரு சாரார். அவர்களும் இந்துக்கள் என்றே கூறப்படுகிறார்கள்.
இரு வேறு உலகம் இரு வேறு இயற்கை. இறந்து போன தம் முன்னோர்களுடன் சாவகசமாக உரையாடிய ஒரு கூட்ட மக்களையும் அவர்கள் சடங்குகளையும் காணும் வாய்ப்பு எனக்குச் சென்று வாரம் கிடைத்தது. மட்டக்களப்புக்கு வந்திருந்த என்னை “கிழக்கின் பழம் குடிக்களான வேடுவ மக்களின் சடங்கு நிகழ்கிறது பார்க்க வாரு ங்கள்” என அழைத்தார் எனது மாணவன் பத்தி நாதன்.
சடங்கு நிகழிடம் கழுவன்கேணி. ரயில்வே கடவை தாண்டி அப்புறம் சென்றால் வருவது களுவன் கேணி. அங்கு தொடக்கம் தளவாய் வரை வேடுவ குல மக்கள் வாழ்கிறார்கள். அது அந்த மக்களுக்கு உரித்தான பூமி. கழுவன் எனும் தலைவன் ஆண்ட பூமி எனக் கருதப்படுகிறது.
இன்றோ அந்த பூமி வேறு பலரால் ஆளப்படுகிறது. நிலம் இழந்து போனவர்களுள் அந்தக் கூட்டத்தினரும் ஒருவர். எங்கள் நிலத்தை எமக்குத் தாருங்கள் என்று போராடு வேண்டியவர்களுள் அவர்களும் அடங்குவர். அதிகார பலம் அற்றதனால் அவர்கள் குரல் வெளியில் கேட்பதில்லை.
நிலம் இழந்து போனாலும் தம் பாரம்பரிய பண்பாடு களை இழக்காமல்மறக்காமல் அதனை நினைவு கூர்ந்து படி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது அந்த இனம் அந்தப் பாரம்பரிய நினைவுகளும் அடையாளங்களுமே அவர்களுக்கு ஓர் ஆன்ம பலம் தந்து அவர்களை தனித்துவத்தோடு வாழ வைக்கிறது போலும். அந்த இடத்திற்குத் கலாநிதி சிவரத்தினம் தனது காரில் என்னை அழைத்துக் கொண்டு சென்றார்.
ஒரு இடத்துக்கு மேலால் கார் செல்ல முடியவில்லை. பக்திநாதன் அங்கிருந்து சடங்கு நடக்கும் இடம் செல்ல ஒழுங்கு செய்து இருந்தார்.மோட்டார் பைக்கிலிலும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை. ஓரிடத்தில் இறங்கி மணலுக்குள்ளால் நடந்து அந்தக் காட்டுப் பகுதியை அடைந்தோம். அந்தக் பற்றைக்காடு வெட்டி வெளியாக்கி பந்தல்கள் போடப்பட்டிருந்தன.
இரண்டு பெரிய மரங்கள் தந்த பெருநிழலிலே மக்கள் கூடியிருந்தார்கள். நான் சென்ற நேரம் மதிய நேரம். மத்தியான உணவு ஆக்கி அனைவரும் பகிர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்னர் தான் சடங்கு ஆரம்பமாக இருந்தது. என்னையும் சிவரத்தி னத்தையும் கண்டவுடன் காட்டு மலர்களாலான மாலை அணிந்து வரவேற்றனர். மர நிழலிலிருந்து பாயில் அமர்ந்து கொண்டோம்.
“சாப்பிடுகிறீர்களா”? என்று கேட்டார்கள்
“தாருங்கள்”. என்றேன்.
உலுவா அரிசி எனப்படும் கம கம என மணக்கும் வெந்தய குழம்பினதும் கோவாச் சுண்டலினதும் மணம் மூக்கைத் துளைக்க உணவுச் சுவை நாக்கை நிறைக்க சாப்பாட்டைச் சுவைத்து சுவைத்து உண்டோம்.
“யார் இந்தச் சுவை உணவின் கர்த்தா?,” என்று கேட்டேன்
ஒருமூதாட்டியைக் காட்டி னார்கள்.
“நல்ல ருசியான கறியம்மா”
எனஅவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்தேன். அவர் முகமோ மகிழ்ந்து போயிருந்தது. சூழலில்உள்ளவர்களும் மகிழ்ந்து போயிருந்தனர். கொடுத்து மகிழும் கூட்டம் அது என்பதையும் மற்றவர் மகிழ்வில் தாம் மகிழும் கூட்டம் என்பதையும் புரிந்து கொண்டேன். மிக நெருக்கமான உறவுகளோடு இருக்கின்ற உணர்வு தான் அக்கணம் எனக்கு ஏற்பட்டது.
சாப்பாடு முடிய “இலைக் கஞ்சி இருக்கிறது ஐயா”. என்றார் அங்கு இருந்த ஒருவர். “கொண்டு வாருங்கள்” என்றேன். இலைக்கஞ்சியை எடுத்து குடிக்க ஒரு இலையையும் தந்தார்கள். இலையிலே கஞ்சியை எடுத்து காட்டு மர நிழலில் அமர்ந்து உறவோடு உண்ணும் உணர்வோடு அந்தக் கஞ்சியை சுவைத்து உண்டேன்.
கஞ்சின் சுவையோ உணவுச் சுவையையும் மீறி இருந்தது. அருகில் இருந்து சிறுவர்க ளுடன் முதியவர்களுடனும் உரையாடிய பின்னர்சடங்குக் கான ஆயத்தங்களை பார்க்க சென்றோம். மத்தியான வெயில் தகித்துக் கொண்டிருந்தது. மண்ணிலே வெற்றுக் கால் பதிக்க முடியாத சூடு
ஆனால் அவர்களுக்கோ வெயில் ஒரு பொருட்டாக தெரியவில்லை. மழையில் நனைந்து வெயிலில் உருகி வளர்ந்த உரம்மிக்க உடல் அவர்களது உடல். பிரதானமான பந்தல் ஒன்று போடப்பட்டிருந்தது.
முதல் நாளே அந்தக் காட்டைத் துப்புரவாக்கி மரங்களின் கீழ் பந்தல்களைப் போட்டு போட்டு சடங்கிற்கு ஆயத்தப் படுத்துவதாக அறிந்தேன்.
நிலையான கோயில் என்று ஒன்று இல்லை. இது புராதன கால வழக்கம். இதற்கான குறிப்புகள் நமது பண்டைய இலக்கியங் களிலே உண்டு. நிலைபெற்ற கற்கோயில்கள் வந்த பின்தானே நிறுவனமும். அதிகாரமும் சுரண்டலும் ஏமாற்றும் வந்தன. அந்தச் சடங்குகளை ஒளிப்பதிவு பதிவு செய்ய கூத்தம் பலக் குழுவினரும் இன்னும் சிலரும் வந்திருந்தனர்.
அனைவரும் எனக்கு பழக்கமான மாணவர்கள். அதன் தலைமை கப்புகனாக நின்று கொண்டிருந்தார் ஒருவர். கப்புகன் என்ன ஏற்கனவே நன்கு அறிந்திருந்தார். வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் நான் ஆசிரியராக கடமையாற்றிய போது தான் என்னிடம் ஏழாம் வகுப்பு படித்ததாக கூறினர். அத்தோடு அவருக்கு நான் அடிபோட்ட கதையையும் கூறினார்.
பின்னர் அவர்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் எம் ஏ பயின்றதாகவும் கூறினார். கழுவன்கேணி. வேடுவர் பற்றி தான் ஒரு நூல் எழுதி இருப்பதாகவும் கூறினார். அங்கு அவர் ஒரு படித்த வராகவோ எம்.ஏ பட்ட தாரியாகவோ மிடுக்குக் காட்டாமல் அவர்கள் ஒருவனாக சாதாரண கப்புகனாக சடங்கை வழிநடத்துவராக நின்று கொண்டிருந்தார்.
சடங்குகளைப் பற்றி எனக்கு விளக்கினார். மாணவனே ஆசிரியராகும் முறைகள் நமது மரபில் சகஜம். அவர்கள் பூசாரியை அல்லது குருக்களைக் “கப்புகன்”. “கப்புவன்” என்று அழைக்கிறார்கள். கதிர்காமத்திலும் கொக்கட்டிச் சோலைத் தான்தோன்றீஸ்வரர் கோயிலிலும்
மண்டூர்க் கந்த சுவாமி கோயிலிலும். மட்டக்களப்பில் சடங்கு செய்யும் சில கோயில் களிலும் கப்புகன் என்ற சொல் பழக்கத்தில் உண்டு.
இந்தச் சடங்கின் போது நான் அவதானித்த பந்தல்கள். பந்தலின் அமைப்புகள், வழிபாடுகள், வழிபாட்டின் முறைகள், அதற்கான உடைகள், அதற்கான பாடல்கள், வழிகாட்டின் போது ஏற்படும் முன்னோர்களுக்கும் தெய் வங்களுக்கும் மக்களுக் குமான இறுக்க்கமான பிணைப்பு என்பன தனியாக எழுதப்பட வேண்டியவை.
இப்படி ஒரு சடங்கினை நான் எனது கலாநிதி பட்ட ஆய்வுக் காக 1970 களின் பிற்பகுதி யில். தேடிச் சென்றிருந் தேன். நான் அன்றுசென்றிருந்த ஊர்களுள். ஒன்று தளவாய். அதற்கு முன்னரே நான் சில கோயில்களில், மாற என்றும் குமார என்றும் அழைக்கப்படும். குமாரத்தன் சடங்கினை என் சிறு வயதில் பார்த்துமிருக் கின்றேன்.
தளவாய் என்பது வேடரும் வேட வேளாளரும் வாழ்ந்த ஊர். அங்கு ஒரு வளர்ச்சி பெற்ற குமார தெய்வச் சடங்கினை அன்று கண்டேன். அதுவே வேடர் குல மக்களின் சடங்கு என முடிவுக்கும் வந்திருந்தேன். ஆனால் அங்கு நடைபெற்ற உத்தியாக்கள் வழிபாடு அதன் புராதனத் தன்மையை எனக்குக் காட்டியது. என் ஆய்வு நாடக ஆய்வு ஆனபடியினால் அதற்கு மேல் நான் அன்று செல்லவில்லை.
பின்னர் அது சம்பந்தமான ஆய்வுகளை பலர் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளையும். நான் படித்துள்ளேன். ஏறத்தாள 40 வருடங்களுக்குப் பின்னர் அந்தச் சடங்கினை இன்னொரு வடிவத்தில் காணும் பேறு எனக்கு அன்று கிடைத்தது. பழைய நிகழ்த்துகைகளில் இருந்து இவை சற்று மாறியிருந்தன. இப்போது என் போக்கிலும் நோக்கிலும் மாற்றமும் ஏற்பட்டிருந்தது.
மானுடவியல, சமூகவியல், உளவியல்அம்சங்கள் நிரம்பிய அந்த சடங்குகளின் என் அவதானத்தை இங்கு பதிய உள்ளேன்
பேராசிரியர் சி. மௌனகுரு