கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் மனைவியைக் கணவன் தாக்கிக் கொலை செய்துள்ள சம்பவம், கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
அமானி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயான 24 வயது பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மகியங்கனை பிரதேசத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தேகநபரின் மனைவி, வேறு ஒரு நபருடன் ஏற்படுத்தி கொண்ட தகாத தொடர்பு தெரியவந்ததையடுத்து நேற்றுமுன்தினம் அங்கிருந்து கம்பளை, வெலம்பொட பிரதேசத்துக்கு வந்து குடியேறியுள்ளனர்.
அங்கிருந்து வந்த நேரத்திலிருந்து மனைவி குழந்தையையும் கவனிக்காது சம்பவம் இடம்பெற்ற இன்று அதிகாலை வரை தொலைபேசியில் உரையாடியவாறு இருந்தார் என்று தெரியவருகின்றது.
இதையடுத்து கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து ஆத்திரம் கொண்ட பெண்ணின் கணவர் , கட்டையால் மனைவியைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்தி லதா மேற்கொண்டார். மரண பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.