(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 2023 வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி 2023 நடைபெறுகிறது. இவ்விழாவில் இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டி கௌரவிக்கப் படுகின்றார். இதனையோட்டி இந்த ஆக்கம் பிரசுரமாகிறது)
யுத்தகால வன்னியின் வரிகளை யதார்த்த பூர்வமாக எழுத்துருவில் வடித்த “தாமரைச்செல்வி” ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் முதன்மையான ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் பல புதினங்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.
போர் சூழ்ந்த நிலத்தில் மலர்ந்த தாமரை:
போர் சூழ்ந்த நிலமொன்றின் நடுவிலிருந்துகொண்டு, சனங்களின் பாடுகளை யதார்த்தச் சித்தரிப்போடு எழுதத்தொடங்கிய தாமரைச்செல்வி, தான் சார்ந்த மண்ணினதும் மக்களதும் நெருக்கமான படைப்பாளியாக இலக்கியத்தில் அறிமுகமானார் எனக் கூறுகிறார் செம்பியன் செல்வன்.
செம்பியன் செல்வன் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும் ‘விவேகி’ சஞ்சிகையின் இணையாசிரியர் ஆவார். தாமரைச் செல்வியின் கதைகளில் நெல்லின் வாசனையை, வயல் நிலத்தின் மணத்தை, விவசாயக் குடும்பங்களின் விருப்பங்களை, அவர்களின் தேவைகளை, அவர்களுடைய பிரச்சினைகளை, அந்தக் குடும்பங்களின் சந்தோசங்கள், துக்கங்களை எல்லாம் காணமுடியும் என்கிறார் செம்பியன் செல்வன்.
ஈழத்துப் புனைகதை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. ‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’, ‘வன்னியாச்சி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளை ஏலவே அறுவடை செய்து சிறுகதைத் துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர் என புலோலியூர் ஆ. இரத்தின வேலோன் குறிப்பிட்டுள்ளார்.
தாமரைச்செல்வி கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனிலுள்ள குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தமது ஆரம்பக்கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்தார்.
வன்னி மக்களுக்கு ஒரு வன்னியாச்சி:
தாமரைக்கு ஒரு செல்வி. வன்னி மக்களுக்கு ஒரு வன்னியாச்சி. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை. அவருடைய சிறுகதைகள், நாவல்களில் வன்னிமண்ணின் மணம் கமழும். பிரதேச இலக்கியத்தில் வன்னி மண்ணின் மகிமையை எழுதிய படைப்பாளிகளின் வரிசையில் இவருக்கும் தனியிடம் இருக்கிறது எனக்கூறும் எழுத்தாளர் முருகபூபதி, அவரின் படைப்பாற்றலை பின்வருமாறு விபரிக்கின்றார்.
தமிழகத்தில் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படும் விவசாய மக்களின் ஆத்மாவை பிரதிபலிக்கும் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் படித்திருக்கின்றோம். அவற்றுக்கு ஈடான ஈழத்து தமிழ் விவசாய மக்களின் குரலை தமது படைப்புகளில் ஒலிக்கச்செய்தவர்கள், செங்கை ஆழியான், பாலமனோகரன், தாமரைச்செல்வி ஆகியோர். இவர்களுக்குப்பின்னர் தோன்றிய புதிய தலைமுறை வன்னிப்பிரதேச எழுத்தாளர்கள் பலர் அம்மக்களின் வாழ்வை இலக்கியமாக்கி வருகின்றனர். அவர்களுள் தாமரைச்செல்வி ஆளுமைமிக்க பெண் எழுத்தாளர் ஆவார்.
வன்னிமண்ணின் மணம் கமழும் யதார்த்த இலக்கியத்தை படைத்த தாமரைச் செல்விக்கு
பச்சை வயற் கனவுகள் நாவலுக்காக இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருதுமற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருதும் கிடைத்தது.
ஒரு மழைக்கால இரவு சிறுகதைத் தொகுப்புக்கு வடக்கு – கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசும் கிடைத்தது.
விண்ணில் அல்ல விடி வெள்ளி நாவலுக்கு யாழ் இலக்கியப் பேரவையின் பரிசும்,
வீதியெல்லாம் தோரணங்கள்” நாவலுக்கு வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசையும் பெற்றுக்கொண்டார்.
தாகம் நாவலுக்கு கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசும்,
வேள்வித் தீ குறுநாவலுக்கு முரசொலி பத்திரிகையின் முதல் பரிசும் கிடைத்தது. அத்துடன் வீதியெல்லாம் தோரணங்கள் நாவலுக்கு வீரகேசரி – யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டியில் இரண்டாம் பரிசையும்,
உயிர் வாசம் நாவலுக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவல் விருதும் தாமரைச் செல்வி பெற்றுள்ளார்.
தாமரைச்செல்வி தன் மெய்யனுபவங்களையும் பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகரிடையே அவற்றினைத் தொற்றவைப்பதோடு தமிழ்ப்புனைகதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீனச் செல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதும் தாமரைச்செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம். போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள். அழிவுகள்.
பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றைத் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவங்கொடுப்பதில் வல்லமையானவர். இச்சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்குச் சாட்சி சொல்வதாகவே அமைந்திருக்கிறது என புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது 2000 ஆண்டிலும்,
வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது 2001 ஆண்டிலும்,
கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும் 2002 ஆண்டிலும் பெற்றுள்ளார்.
கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது 2003 ஆண்டிலும், தமிழ் நாடு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது 2010 ஆண்டிலும், கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது 2011 ஆண்டிலும், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2012 ஆண்டிலும், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு 2015 ஆண்டிலும் தாமரைச் செல்வி பெற்றுள்ளார்.
கல்விப் பாடத்திட்டத்தில்
அத்துடன் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் ‘இன்னொரு பக்கம்’ என்ற சிறுகதை, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தரம் 11 ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் 2015 ஆம் ஆண்டுமுதல் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கல்வி அமைச்சின் பதினோராம் ஆண்டு பாடத்திட்டத்தில் தாமரைச்செல்வியின் “பசி” என்ற சிறுகதை இணைக்கப்பட்டிருக்கிறது.
தாமரைச்செல்வியின் “பசி” என்ற சிறுகதை தமிழ்நாடு இமயவர்மன் என்பவரால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டு, இலண்டனில் நடைபெற்ற ‘விம்பம்” குறும்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர் விருது பெற்றது.
1996 (இடைவெளி) என்ற சிறுகதை இயக்குனர் மகேந்திரனாலும், “பாதணி” என்ற சிறுகதை ஜான்.மகேந்திரனாலும் “சாம்பல் மேடு” என்ற சிறுகதை திரு. திலகனாலும் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் “பாதை” “வாழ்க்கை” ஆகிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
‘வன்னியாச்சி’ படைத்த தாமரைச்செல்வி :
‘வன்னியாச்சி’ என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள 37 கதைகளையும் தான் வாழ்ந்த கிளிநொச்சி மண்ணின் அந்தப் பிரதேசத்தின் அடையாளத்தை அந்த மக்களின் துயரங்கள் அதாவது சொந்த ஊரை, உழுது பயிர் செய்த காணியை விட்டு ஒரு முறை அல்ல பல முறை இடம்பெயர்ந்து மக்கள் அலைவதை, வறுமை பசி பட்டினி, கொடுமையான கொலைகள், குண்டு வெடிப்புகள் மக்கள் சிதறிச் சாவது, இப்படியாக இறந்தவர்களை அடையாளம் காண்பது, முதியவர்களின் வலி, குழந்தைகளின் பசி சித்திரவதைகள் என்று தான் வாழ்ந்த பிரதேசத்தின் அதாவது அந்த வன்னி மக்கள் சார்ந்து வலியோடும் கண்ணீரோடும் பின்னிப் பிணைந்துள்ளார் என தாமரைச்செல்வி பற்றி நவஜோதி ஜோகரட்னம் தெரிவித்துள்ளார்.
தாமரைச்செல்வியின் ‘வன்னியாச்சி’ சிறுகதைத் தொகுதியில் எழுதியுள்ள இந்தக் கதைகள் ஒரு யுத்த காலத்தின்போது வன்னிமக்கள் அனுபவித்த கொடூரங்களை அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல என்றென்றும் உலகிற்கு எடுத்துச் சொல்கின்ற வரலாறாக நிலைத்து நிற்கும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை எனவும் நவஜோதி ஜோகரட்னம் தெரிவித்துள்ளார்.
வன்னி மண்ணின் மணம் கமழும் பெண் ஆளுமையான தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டி, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 2023 வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் கௌரவிக்கப்படுகின்றார்.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா