– தீபச்செல்வன், இலங்கைக் கவிஞர், பத்திரைகையாளர்
இதிகாசக் கதையான ராமாயணத்தில் இருந்து இன்றைய நிலை வரையிலும் இலங்கை கவனம் மிக்கதாகவே இருக்கிறது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான இன ஒடுக்குமுறை, 30 ஆண்டு காலப் போர், போருக்குப் பிந்தைய சூழலில் நீதிக்கான ஈழத் தமிழர்களின் போராட்டம், ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல், கோத்தபய ராஜபக்சவின் ஆட்சிப் பொறுப்பேற்பும் அதற்குப் பிந்தைய இலங்கையின் வீழ்ச்சியும்என்று இலங்கையில் வரலாறு எப்போதும் சர்ச்சைமிகுந்ததாகவும் பரபரப்பு மிக்கதாகவும் நீள்கிறது. இந்நிலையில், இப்போது பிரித்தானிய தனியார் தொலைக்காட்சியான சேனல் 4 ஊடகம், இலங்கை விடயத்தில் பெரும் அதிர்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
கோத்தபயவை அதிபராக்கிய ஈஸ்டர் படுகொலை: 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் நாளன்று இலங்கைத் தலைநகர் கொழும்புஉள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின்மீது ஒரே நேரத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் இலங்கை மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பன்னாட்டு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு, இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது. ஈஸ்டர் நாள் பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த 279 பேர் இதில் கொல்லப்பட்டார்கள். தமிழர், சிங்களவர், வெளிநாட்டவர் எனப் பலதரப்பட்ட மக்களும் இதில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது.
அப்போது இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும் இருந்தார்கள். இவர்களின் ஆட்சியில் சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே ஈஸ்டர் குண்டுவெடிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக அப்போது அதிகாரத்தைக் கைப்பற்ற அதிபர் தேர்தலில் களமிறங்கிய ராஜபக்சக்கள் கூறினர்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், அவரது தம்பி கோத்தபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டார். ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலையும் தன் தேர்தல் பிரச்சாரத்துக்குத் தீவிரமாகப் பயன்படுத்தி, அதிபர் தேர்தலில் அவர் வென்றார்.
ஈஸ்டர் படுகொலையாளிகள் யார்? – 30 ஆண்டு காலமாக இலங்கை அரசுக்குப் பெரும் சவாலாக இருந்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் துணை கொண்டு சிதைத்தது இலங்கை அரசு. அப்படிப்பட்ட இலங்கை அரசுக்கு எப்படி ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்க இயலாமல் போனது? ஏன் ஈஸ்டர் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை இன்னமும் இனம் காண முடியவில்லை? இப்படி இலங்கை அரசியலில் நீடித்துவந்த கேள்விகளுக்கு, சேனல் 4 தொலைக்காட்சி பதில் அளித்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புப் போர் இலங்கை அரசியலுக்கு எப்போதும் அவசியமாக இருந்தது. அது இன்று இல்லாதபோது, சொந்த மக்கள் மீதே குண்டு வீசப்பட்டது என்கிற உண்மையும் அம்பலமானது.
2019இல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்ச குடும்பத்தினரே ஈஸ்டர் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்றும் கோத்தபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இதன் பின்னணியில் இருந்துள்ளார் என்றும் சேனல் 4 ஊடகம் குற்றம்சுமத்தியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரின் தீவிர விசுவாசியான பிள்ளையான், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா அம்மானின் தரப்பைச் சேர்ந்தவர்.
இவர் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் சிறையில் இருந்த காலத்தில் கோத்தபய ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக இந்தத் தாக்குதலை இஸ்லாமிய இளைஞர்களை வைத்து நடத்தியதாக, பிள்ளையானுடன் நெருங்கிச் செயல்பட்ட அசாத் மௌலானா என்பவர் சேனல் 4 தொலைக்காட்சிக்கு முக்கிய வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இறைநீதி இரண்டாகுமா? – இலங்கையை விட்டு வெளியேறிய அசாத் மௌலானா சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோரிய வேளையில் சொல்லப்பட்ட இந்தக் காரணத்தை விரிவாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இவரின் வாக்குமூலத்தை முக்கியமாகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தில், இலங்கையின் கிறிஸ்துவத் தலைமை மத குருவான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஈஸ்டர் படுகொலை குறித்துத் தன் தரப்புக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ஈஸ்டர் படுகொலைக்கான நீதியை இன்னமும் வழங்கவில்லை என்று அடிக்கடி பேசிவந்த ரஞ்சித் ஆண்டகை, குற்றவாளிகள் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்களோ அதே விதி, இதன் பின்னணியில் உள்ளவர்களுக்கும் காத்திருக்கிறது என்றும் கடந்த ஆண்டு ஈஸ்டர் படுகொலை நினைவு நாளிலும் பேசியிருந்தார்.
ஈஸ்டர் படுகொலை நடைபெற்றமைக்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கைத் தீவில் கிறிஸ்துவர்களும் சைவர்களுமாக இருந்த தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் இல்லாமல் ஆக்கப்பட்டார்கள். ஈஸ்டர் படுகொலையின் பின்னால் இருந்தவர்கள்தான் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பின்னாலும் இருந்தார்கள். இனப் படுகொலைக்கான நீதியை ஈழத் தமிழ் இனம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், சிங்களத் தலைவர்கள் போல சிங்கள மத குருக்களும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அநீதியையும் ஈஸ்டர் படுகொலைக்கு நீதியையும் எதிர்பார்ப்பதுதான் வேடிக்கை.
சிங்களர்மீது வெடித்த குண்டுகள்: ஈஸ்டர் படுகொலையின் போது குண்டுகளால் சல்லடையாக்கப்பட்ட கூரையுடன் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இருந்தது. அதனைப் பார்த்தபோது, ஈழத்தில் இலங்கை அரசு குண்டு வீசி அழித்த யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலயமே நினைவுக்கு வந்தது. அத்துடன் ஈஸ்டர் படுகொலையால் தேவாலயத்தில் கொல்லப்பட்ட மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி, ஈழத்தில் மடு தேவாலயத்திலும் நந்தாவில் அம்மன் கோயிலிலும் இலங்கை அரசின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்களும் காயம்பட்ட மனிதர்களும்தான் நினைவுக்குவந்தனர்.
ஆலயங்கள் என்றும் பாராமல் தெய்வங்கள் என்றும் பாராமல் ஈழத் தமிழ் மக்களை அழிப்பதற்காக அன்றைக்குத் தமிழர் மண்ணில் வீசப்பட்ட குண்டுகள்தான், இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சிங்களர் மீதும் சிங்களப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் மீதும் வீசப்பட்டுள்ளன. இலங்கை அரசு அன்றைக்கு ஆலயங்கள் மீது மேற்கொண்ட இனவழிப்புப் போர் தாக்குதலைத் தடுத்திருந்தால், பின்வந்த காலத்தில் ஈஸ்டர் படுகொலையைத் தடுத்திருக்க முடியும். அதைப் போல 2009இல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டித்திருந்தால், 2019இல் அவர்கள் ஈஸ்டர் படுகொலையை நிகழ்த்தியிருக்கவும் முடியாது என்பதும் கற்றுணர வேண்டிய பாடம்.
நீதி கேட்பதிலும் பாரபட்சம்: முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குச் சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்றும் அந்த நீதியின் அடிப்படையில் ஈழ தேசத்துக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிந்தைய காலத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிங்களத் தலைவர்களும் ரஞ்சித் ஆண்டகை போன்ற மதத் தலைவர்களும் சர்வதேசத் தலையீடு வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றும் இலங்கையில் நடந்த இனப் படுகொலையை மூடி மறைக்கும் செயல்பாடுகளுக்குத் துணைபோயினர். தற்போது ஈஸ்டர் படுகொலைக்குச் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னாட்டுத் தலையீட்டை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவும் சர்வதேச விசாரணை வழியாகவே நீதியைப் பெறலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் ஈஸ்டர் படுகொலைக்கு நீதியைக் காண சர்வதேச விசாரணைதான் தேவை என்கிறார். பாரபட்சமான இந்த அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. 279 மக்கள் பலியெடுக்கப்பட்ட ஈஸ்டர் படுகொலைக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்று சிங்களர்கள் கேட்பது நியாயம்தான். அதேவேளை, முள்ளிவாய்க்காலில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்ட இனப் படுகொலைக் குற்றத்துக்குச் சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்பது பெரும் அநீதியல்லவா ?
– தொடர்புக்கு: deebachelvan@gmail.com