“குருந்தூர்மலை விகாரை தொடர்பில் நீதியான தீர்ப்பை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவைப் பதவியில் இருந்து விலகச் செய்த அரசு, உயிர் அச்சுறுத்தல் விடுத்து அவரை நாட்டிலிருந்தும் வெளியேற்றியுள்ளது. இது நீதித்துறை மீதான ரணில் – ராஜபக்ஷ அரசின் அதியுச்ச அராஜகத்தை எடுத்துக் காட்டுகின்றது. இந்த மோசமான நடவடிக்கை ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெட்கக்கேடானது.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சிங்களக் கடும்போக்காளர்களும், ரணில் – ராஜபக்ஷ அரச தரப்பினரும் தமிழர்களுடன் மீண்டும் மோதுகின்றார்கள். குருந்தூர்மலை விகாரையை மையமாக வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கொழும்பு இல்லத்தை இடித்தழிக்க அவர்கள் முயற்சி எடுத்தார்கள். தற்போது அந்த விகாரை தொடர்பில் நீதியான தீர்ப்பு வழங்கிய நீதிபதியைக் கொலை செய்யவும் அவர்கள் முயன்றுள்ளார்கள்.
போர் முடிந்த பின்னும் இந்த ஆட்சியாளர்கள் பிரிவினையை விரும்புகின்றார்கள். ஒற்றுமையை ஒருபோதும் அவர்கள் விரும்பவில்லை.
சிங்களக் கடும்போக்காளர்களும், ரணில் – ராஜபக்ஷ அரச தரப்பினரும் புதிய விடயத்தைக் கொண்டு வந்து தீ வைக்க முயல்கின்றார்கள். ஆனால், அந்தத் தீ பற்றாது. ஏனெனில் நனைந்துள்ள தீப்பெட்டிக்குத் தீ வைக்க அவர்கள் முயல்கின்றார்கள். முன்னரைப் போன்று தீ பற்றாது. தமிழ் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றார்கள்.” – என்றார்.