பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவக் கொமாண்டர் ஒருவர் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தலங்கம பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவக் கொமாண்டரே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தலங்கமவில் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். இதன்போது 44 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்தநிலையில் இது தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான குறித்த முன்னாள் இராணுவ கொமாண்டரை மடக்கிப் பிடிக்கப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர் தன்னைத் தேடி வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பதிலுக்குப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் அவரை நோக்கிச் சுட்டதில் அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.