இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பார்க்காத வகையில் அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில், கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டொலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய ஜனாதிபதியாக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது” என்று ட்ரம் கூறியுள்ளார்.
1500 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளோம்: இஸ்ரேல்
இதேவேளை, ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருவதுடன், ஹமாஸ் எல்லையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
3 லட்சம் இராணுவ வீரர்களை தயார் செய்து வைத்துள்ள இஸ்ரேல் அரசு, கடல் வழியாக தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளதுடன், காசாவில் இருந்து மக்களை வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதுடன், எல்லை பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், லெபனான் நாட்டின் எல்லையிலும் இராணுவத்தை குவித்து வருகிறது. நேற்று இரவில் இருந்து எல்லைத்தாண்டி ஹமாஸ் பயங்கரவாதிகள் வரவில்லை என்று இராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் குறிப்பிட்டுள்ளார்.