இங்கிலாந்திலுள்ள கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றக் கும்பல்களின் வன்முறைகளும் கட்டுக்கடங்காமல் போயிருப்பதாகவும் வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைகளில் நடக்கும் திருட்டுகளையும் இதர வன்முறைச் சம்பவங்களையும் வர்த்தகர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
இந்த ஆண்டு மட்டும் 10 பெரிய நகரங்களில் கடைத் திருட்டுச் சம்பவங்கள் 27 சதவீதம் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து சில்லறை வணிகக் கூட்டமைப்பு அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடைத் திருட்டால் வாரத்துக்கு ஏறக்குறைய 250 பவுண்ட் (305 வெள்ளி) நட்டம் ஏற்படுவதாக இலண்டன் வியாபாரி ஒருவர் AFP செய்தியிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு என்றுமில்லாத அளவுக்குப் பேரங்காடிகளில் 1.1 மில்லியன் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இறைச்சி மற்றும் மதுபானம் உள்ளிட்டவை அதிகமாகத் திருடப்படும் பொருள்கள் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.