2
ஓங்கும் ஆலில் ஒழுகும் விழுதும்;
ஒற்றைப் பாதை பலவும்;
தாங்கும் கிளையில் தங்கும் கூடும்;
சந்தக் குருவிப் பொழிவும்;
வீங்கும் நல்ல தோட்டந் துரவும்;
வீட்டில் பெருகும் வரவும்;
நீங்கும் என்றால் நினைவாய் விரியும்!
நித்தம் உள்ளம் எரியும்!
ஆடும் மேயும் அந்தத் தரையும்;
அஞ்சும் சுடலைக் கரையும்;
பாடும் குயிலின் பாடல் இசையும்;
பஞ்சின் பாயும் விசையும்;
கூடும் பேடும் கூவல் மதுவும்;
குஞ்சுக் கோழி அதுவும்;
வீடும் காணி வீதி எல்லாம்…
விரியும் கனவில் கல்லாம்!
இலவம் பஞ்சை ஊதித் திரியும்
இன்பம் வாழும் நாளும்;
உலவும் அணிலின் முதுகைக் காணும்
உள்ளம் தின்னும் நாளும்;
திலகம் அணியும் பசுவின் வாலைத்
தீண்டித் திரியும் நாளும்;
கலகம் போராய்க் காணும் நாளில்…
கரியாய் நிற்கும் கோலம்!
உழுதுண் வயலில் உயிராம் பயிர்கள்
ஊதிப் பெருகும் போதில்…
தொழுதே நேர்த்தி தொகையாய் வைக்கத்
தோன்றும் அந்தப் போதில்…
வழுவா தெங்கள் வாழ்வும் நன்றாய்
வளவும் பொங்கும் போதில்…
கழுகாய் உண்ணக் கயவர் வந்தார்
காலன் உருவில் அங்கே..!
வசவை மண்ணை வாரிச் சுருட்டி
வளமே அழித்தார் கயவர்!
பசுவும் சுட்டார்! பாலகர் சுட்டார்!
பாதையில் சுட்டார் பழியர்!
கொசுவைப் போலக் கருதிக் கொண்டே
கோயிலில் சுட்டார் கொடியர்!
பசையாய் ஒட்டிப் படுத்த மண்ணைப்
பாய்ந்தே எரித்தார் பகைவர்…!
செ.சுதர்சன்
(குறிப்பு: வசவை என்பது வசாவிளான் கிராமக் குறுக்கச் சிறப்புப் பெயர்)