அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன்
சாலையோரப் புற் படுக்கையொன்றில்..
என்மேல்
காற்றில் அசைந்து கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள்
மலர்களைத்தூவி அஞ்சலித்துக் கொண்டிருக்கின்றன..
படையெடுத்து வரும்
எறும்புக் கூட்டங்கள் கன்னங்களை
முத்தமிட்டுத் தழுவிச் செல்கின்றன..
கனரக வாகனங்களின் சக்கரங்கள்
என் பிஞ்சுக் காதுகளில் ஊழையிடுகின்றன..
தெருவோர நாயொன்று
என் கரமொன்றை
கடித்திழுத்துச் சுவைத்துக்கொண்டிருக்கிறது..
இரத்தவாசம் வீசும்
உடலுக்கு ஈக்கள் சாமரம்
வீசி நிற்கின்றன..
இதோ வானம்
முகமிருண்டு எனக்காய் ஓலமிடத் தயாராகின்றது..
இருந்தும் அம்மா !
நான் கண்களை மூடித் தூங்கிக் கொள்கிறேன்..
கருவறை வாயிலை தாழிட்டு மூடாது வரவேற்ற நீ
என்னை கட்டியணைத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்..
சுடர்நிலா