ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் ‘ஸ்மோக்’ எனும் இணைய தொடர் மூலம் நடிகை சோனா இயக்குநராக அறிமுகமாகிறார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாகவும், குணச்சித்திர நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை சோனா.
இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி எழுதி இருக்கும் கதையை ‘ஸ்மோக்’ எனும் பெயரில் இணைய தொடராக உருவாக்குகிறார்.
மேலும் இந்த இணையத் தொடரை தயாரிப்பதுடன் முதன்மையான கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார். இவருடன் முகேஷ் கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கபில் ராய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநராக அறிமுகமாவது குறித்து நடிகை சோனா பேசுகையில், ” பிரபல தனியார் வார இதழ் ஒன்றில் இருபது வாரங்களுக்கு மேலாக எம்மூடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்ட தொடர் ஒன்று வெளியானது.
அந்த தொடரை மையமாக வைத்து ஓய்வு கிடைக்கும் தருணங்களில் எல்லாம் எம்முடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நாட்குறிப்பில் எழுதத் தொடங்கினேன். 2017 ஆம் ஆண்டில் இயக்குநருக்கான பயிற்சியை பெற்றேன்.
நான் எழுதிய கதையை எம்முடைய நலம் விரும்பிகளிடமும், நண்பர்களிடமும் சொன்ன போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்தக் கதையில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 99 சதவீதம் உண்மையாக இடம்பெற வைத்திருக்கிறேன்.
இந்த கதையை எழுதி இயக்க தீர்மானித்த போது எமக்கு பெரும் பேராதரவு அளித்தவர்கள் ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தினர். அவர்களுக்காக இந்த இணைய தொடரை தயாரித்து நடித்து இயக்குகிறேன்.
இந்த இணைய தொடரை பல சீசன்களாக உருவாக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறேன். எம்முடைய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த எம்மை போன்ற ஐந்து நடிகைகளை தேடிப்பிடித்து நடிக்க வைக்கிறேன்.
‘ஸ்மோக்’ எனும் இந்த இணைய தொடர் உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும். இந்த இணைய தொடர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் வெளியாகிறது. ” என்றார்.