0
கொடியது அரசு” என்றால்
கோலையே (Call) எடுக்க மாட்டார்!
—————————————–
01
எண்ணமே பெரிதாய்க் கொண்டு,
ஏளனக் கதைகள் சொல்வார்;
விண்ணையே வியக்க வைக்கும்
வீசுவாய் வீச்சில் வில்லார்;
மண்ணையும் சிறிதாய் ஆக்கும்
மாபெரும் மழுப்புச் செய்வார்;
கண்ணையும் இழந்தார்; கல்விக்
கயவரே போல ஆவார்…!
02.
வாழ்ந்தவர் நிலத்தைப் பேய்கள்;
வதைத்ததோர் கதையைச் சொன்னால்..!
வாழ்விடம் அழிந்ததென்றே
வலிகளின் வாழ்க்கை சொன்னால்…!
தாழ்ந்திடச் செய்தார் என்றே,
தரவுகள் பலவும் தந்தால்..!
வீழ்ந்ததாய் விரையார்…! அரசை
விந்தையாய்க் காதலிப்பார்…!
03.
பகைவரின் கால்கள் நக்கி;
பணத்தினைத் தேடி; இன்னோர்
தகைமையை வீழ்த்த என்றும்
சவக்குழி தேடி நிற்பார்…!
வகையதாய் வதைகள் செய்யும்
அரசதைக் கேள்வி கேளார்..!
நகைப்பதற்குரியார்..! நாளும்
நலங்களை நக்கித் தின்பார்..!
04.
அடியதை வருடி; தங்கள்
ஆண்மையை அடைவு வைத்து;
படியது ஏறிப் பல்லைப்
பாயென விரித்து நன்றாய்,
பொடியெனப் பொய்யை என்றும்
பொத்தென விடுவார்; “இன்று
கொடியது அரசு” என்றால்
கோலையே (Call) எடுக்க மாட்டார்…!
05.
“அரசினை எதிர்த்தால் இன்று
அச்சமே பரிசு” என்பார்…
நரமென வீழ்வதெண்ணார்;
நஞ்சினை அமுதம் என்பார்;
“பரசிவன் பயமே இல்லான்!
பதியென உள்ளான்!” என்றே
பரவயோர் பதிவை இட்டால்
பயமது காட்டிக் கொல்வார்..!
06.
ராமனாய்க் காடு சென்றால்,
“ரம்மியம் ஆஹா” என்பார்..!
ஆமிதான் விரட்டி எங்கள்
அருமனை அழித்து விட்டால்;
“சாமி நீ கும்பிட்டாயா…?”
“சாத்திரம் நீ கேட்டாயா…?”
“போம் இனிப் போரே…” என்று
போக்கிரிப் பொய்கள் சொல்வார்!
07.
ஊடகக் கதைகள் சொல்லும்…!
உப்பிலாப் பேச்சும் சொல்லும்…!
பூடகப் பேயும் சொல்லும்….!
புழுத்த நீ புழுதான் என்றே?
வீடகம் தேடி நாமும்…
விளைநிலம் விட்டு நாமும்…
மூடகம் ஆன செய்தி
மூடனே! முட்டாள்! சொல்லேன்…?
08.
தேனெனச் செய்தி “மானம்
செப்பிடும் செட்டை” என்றார்!
போனிலே (Phone) செய்தியிட்டால்
“பொசுக்குவர் அரசு” என்றார்!
மீனது மீட்சி என்றே;
மின்கவர் விழிகள் கொண்டான்..!
கோனவன் திருமால் கொண்ட
கொற்றமும் அறியா மூடர்..!
09.
மாம்பழ நாட்டை வெட்டும்
மனசுதான் யாருக்குண்டு?
தாம்பலர் வெட்டி நின்றே
தலைமையே தகுதி கொண்டார்!
“ஆம்பலும் அரனே” என்போம்
“ஆரதை வேண்டாம்” என்றோம்
காம்பையும் கடவுள் காக்கும்!
கடமையும் கடமை தானோ…!
10.
கொடுமைசெய் ஆட்சி உண்டு,
கொழுப்பிலே வளர்ந்து மாடாய்…
திடுமென வளர்ந்ததெண்ணார்..!
தினமுமே தீமை தின்பார்!
கடுமனக் கயமை கண்ணில்;
காட்டியே கனிவைச் சொல்லில்…
விடுமவர் குலங்கள் வீழும்…!
வீறுடன் நாடே மீளும்…!
19/10/2023
செ.சுதர்சன்