இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை அரசு கோரியுள்ளது.
அரசின் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு பாரிய பிரச்சினை என்று கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இந்தப் பிரச்சினை புதுடில்லியின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார் என்றும் மேற்கோள் காட்டப்பட்டபட்டுள்ளது.
உள்ளூர் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தும் வருகின்றனர். இதனால் வடக்கு கடலில் பதற்றம் நிலவுகின்றது.
மன்னார், நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவுக்கு அருகாமையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 5 இழுவைப் படகுகளுடன் 27 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த 48 மணி நேரத்துக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தப் பிரச்சினையை ஐ.நா. தரப்புடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.