செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐ.நாவை நம்பாதீர்கள்; அது பல்லிலாத பாம்பு! – மனோ விளாசல்

ஐ.நாவை நம்பாதீர்கள்; அது பல்லிலாத பாம்பு! – மனோ விளாசல்

3 minutes read
“காசாவில் நடக்கும் அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.நா. சபையாக இருக்கலாம் அல்லது ஐ.நா. மனித உரிமை ஆணையகமாக இருக்கலாம் அவர்கள் பல்லில்லாத பாம்புகளாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை. சர்வதேச சமூகம் என்று ஒரு சமூகம் இருக்கின்றது. அவர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம் என்று எதுவும் கிடையாது. இலங்கையிலும் அப்படித்தான். இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் சாட்சியமில்லாத யுத்தமாகும். அதுதான் உண்மை. பலஸ்தீனத்துக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு வேறு நியாயம் இருக்க முடியாது.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தச் சந்தர்ப்பத்திலே, காசாவில், மேற்குக் கரையில் நிகழக்கூடிய அடாவடி யுத்தத்தால், சண்டையால், சச்சரவால் உயிர்களை இழந்து, அவயங்களை இழந்து துன்பப்படும் அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோல், காசாவில் இருந்து போராளிகளால் தாக்கப்பட்ட, உயிர்களை இழந்து, அவயங்களை இழந்த இஸ்ரேலின் தென் பகுதியில் வாழும் மக்களுக்கும், கடத்தபட்ட மக்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தச் சண்டை முழுமையான யுத்தம் அல்ல. யுத்தம் என்றால் பல்வேறு சண்டைகளின் தொகுப்பு ஆகும். ஆகவே, இந்தச் சண்டை என்பது அனைத்துக்கும் ஆரம்பம் அல்ல. இந்தச் சண்டை என்பது அனைத்துக்கும் ஆரம்பம் அல்ல. இது ஆக ஹமாஸ் போராளிகளால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை அல்ல. அதனால், தென் இஸ்ரேலில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். படையினரும் கொல்லப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டர்கள்.
ஆனால், அதை ஆரம்பம் அல்ல.

இந்த யுத்தம் நீண்ட நெடுங்காலமான பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் அடாவடி ஆக்கிரமிப்பு காரணமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கான மூல காரணம் பலஸ்தீன சகோதரர்களின் மீதான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே ஆகும். இதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே, நாமல் ராஜபக்ச இந்தச் சபையில் சொன்னதைப் போன்று இந்தப் பிரச்சினையின் அடிப்படை காரணம் கண்டறியப்பட வேண்டும்.

பாருங்கள், நேற்று முதல்நாள், காசாவில் மருத்துவமனையின் மீது குண்டுகள் விழுந்தன. பாடசாலையின் மீது குண்டுகள் விழுந்தன. மக்கள் குடியிருப்புகளின் மீதும் குண்டுகள் விழுந்தன.

இதேதான் இலங்கையிலும் நிகழ்ந்தது. இலங்கையிலும் அப்படித்தான். வடக்கு – கிழக்கில் யுத்தத்தின் போது, மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றன. வடக்கு, கிழக்கில் பாடசாலைகளின் மீது குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றன.

இலங்கையில் வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் போது, மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றன.

யுத்தம் தீர்வல்ல. அதற்குக் காரணம் யாராகவும் இருக்கலாம். ஆனால், யுத்தம் தீர்வல்ல. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே, தீர்வு காணப்பட மூலகாரணம் கண்டறியப்பட வேண்டும்.

இன்று, இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஐ.நா. சபையாக இருக்கலாம் அல்லது ஐ.நா. மனித உரிமை ஆணையகமாக இருக்கலாம் அவர்கள் பல்லில்லாத பாம்புகளாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை. இலங்கையிலும் அப்படித்தான். இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் சாட்சியமில்லாத யுத்தமாகும். அதுதான் உண்மை.

இன்று ஐ.நா. நிபுணர்களால் அங்கு அரபு நாட்டிலே, பலஸ்தீன யுத்தத்தைப் பார்த்து அறியக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் அப்படியும் இருக்கவில்லை. அப்படி பார்த்து இருந்தாலும்கூட, அவர்களுக்கு பல்லில்லை. சர்வதேச சமூகம் என்று ஒரு சமூகம் இருக்கின்றது. அவர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம் என்று எதுவும் கிடையாது. ஆக, அவர்களுக்கு தத்தம் தேசிய நலன்கள்தான் இருக்கின்றன. அமெரிக்காவாக இருக்கலாம். இந்தியாவாக இருக்கலாம். ஐரோப்பாவாக இருக்கலாம். அவர்களுக்கு அவர்களின் தேசிய நலன்தான்.

ஐ.நா. சபையைப் பொறுத்தவரையிலே இலங்கையில் நடந்த யுத்தத்தில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக, அவர்களது உள்ளக அறிக்கையில் சொல்லப்பட்டதாக நான் அறிந்தேன். தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையிலே ஒரு இலட்சத்துக்கும் மேல் மக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. இதன்மூலம் ஐ.நா. சபை பாடம் படித்து கொண்டதாகக் கூட அவர்களது உள்ளக அறிக்கையில் சொல்லப்பட்டதாக நான் அறிந்தேன்.

ஆனால், ஐ.நா. பாடம் படிக்கவில்லை. பாடம் படித்து இருந்தால், காசாவில் இந்த அநியாயம் நடக்காது. மேற்கு கரையில் இந்த அநியாயம் நடக்காது. பாடம் படித்து இருந்தால், இந்த அநியாயம் நடக்காது. பெண்கள், குழந்தைகள் இப்படிக் கொல்லப்பட மாட்டார்கள். ஆகவே, சர்வதேச சமூகம் அல்ல, ஐ.நா. சபை அல்ல, நாங்கள்தான் பாடம் படிக்க வேண்டும். ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ எங்களைக் காப்பற்ற வராது. இந்நாட்டுக்குள் நாம்தான் எம்மைக்  காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும்.

இன்று இந்தச் சபையில், அப்பாவி பலஸ்தீன மக்களுக்காக குரல் எழுப்பிய, அரசு தரப்பு, எதிர்த்தரப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் ஒன்று சொல்லி வைக்க விரும்புகின்றேன். இதே நிகழ்வுகள்தான் இலங்கையிலும் நிகழ்ந்தன. பலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வாக இன்று, இரண்டு நாடுகள் என்ற தீர்வு இருக்க வேண்டும் என நாம் கூறுகின்றோம். 1967ஆம் ஆண்டுக்கு முன் இருந்த நிலப்பகுதிக்கு இஸ்ரேல் வாபஸ் வாங்க வேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு சுதந்திர பலஸ்தீன நாடு உருவாக வேண்டும். அதை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அதேபோல், இஸ்ரேல் நாட்டையும், இருப்பையும் பலஸ்தீன நாடு அங்கீகரிக்க வேண்டும். இதுதான் அங்கே தீர்வு.

இலங்கையிலும் மீண்டும் யுத்தம் நிகழ வேண்டாம் என்றால், பிரச்சினை தீர வேண்டும் என்றால், சிங்களவர்களும், தமிழர்களும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால், பலஸ்தீனத்துக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு வேறு நியாயம் இருக்க முடியாது.

இலங்கையில் இன்று தனிநாடு கோரிக்கை காணாமல் போய் விட்டது. ஆகவே, ஒரே இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சி வழங்குவதை சிங்களவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இங்கே வந்து பலஸ்தீனத்துக்கு அனுதாபம் தெரிவிப்பது உண்மையாக இருந்தால், இதை நீங்கள் செய்ய வேண்டும். அதுதான் நியாயம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More