0
ஒற்றைப் பாலகனே…
அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து;
அரவணைப்பே இல்லாது சரிந்த;
உன் தாயின் உடலைக் காண்கையில்…
உத்தம போராளியாகிறாய்!
உன்னை உலகம்
‘தீவிரவாதி’ என்றே தீர்த்துக்கட்டுகிறது!
நீ
“தீவிரவாதி ஆகுக!” என்றே
என் ஆசியைப் பொழிவேன்!
ஆதிப் போர்க் கடவுளின் வடிவாய்
நீ உருக்கொள்வாய்!
ஆயிரம் காளியாய் உன் உரு
அணி வகுக்கட்டும்!
பலஸ்தீனியப் பாலகனே….!
உன் எதிர்முகம் வெற்றிகொள்ள
எனது நேர்த்திகள் இன்னும் அதிகமாகட்டும்!
அது உன் மனதை
உக்கிரமாக்கி எழவைக்கும்!
உன்னைச்
சமர்க்கள நாயகன் ஆக்கும்!
அன்பனே…!
“தீவிரவாதி ஆவேன்” என்று
சூளுரைப்பது ஒன்றும் தவறல்ல!
‘அது வேதநெறி!’ என்பதை
நீ உணர்வது போலவே
நானும் உணர்வேன்!
நீ அவ்வாறு உரைத்தால்
நீ பாலகனே அல்ல…!
நீ என்றும் பெரியவனே!
அதை உணர்க….!
உரிமையின் குரலை
துப்பாக்கியால் நசுக்கும்…
உண்மையின் கனிவை
எறிகணையால் எரிக்கும்…
கபடக் கழுகொன்றின் கர்வத்தை
பலஸ்தீனியப் பாலகன் நீயோ
என்றோ ஓர் நாளில்….
பதறச் செய்வாய்…!
கழுகின் இறக்கை தீயாய் எரிந்து,
சாம்பலாய்க் கருகி,
காற்றில் துகளாய்ப் பறந்து,
காணாமல் போய்…
உனது வானத்தில் காற்று வீசும்வரை
உன் பாயைச் சுருட்டாதே!
என் அருமைப்
பலஸ்தீனியப் பாலகனே…!
இன்று தாயை இழந்தாய்….
நாளை என்ற காலத்தில்
நீ எதையும் இழக்க நேரலாம்!
நான் அறிவதுபோல
அதை நீயும் அறிவாயல்லவா…?
ஆனால்…
உத்தம போராளி
எதையும் வைத்துக்கொள்வதில்லை
என்பதால்
நீயும்… எதையும் இழக்கவில்லை
என்பதையும் உணர்வாய் அல்லவா?
என்றும்…
உனக்காக நான் பாடுவேன்!
உன் புகழ்மேவும்
பரணிப் பாடல்களை…!
அந்தப் பாடல்கள்
கழுகின் கழுத்தொன்றை
அறுக்கும் போதில்….
பெரும் காவியமாக மலரும்!
அப்போது…
நீ காவிய நாயகன் ஆவாய்!
உன் அன்னை
உன்னை
“மகனே…” என்று
ஆரத் தழுவுவாள்!
அந்தத் தழுவலே
என் காவியத்தின் கருவாய் இருக்கும்!
செ.சுதர்சன்
20/10/2023