“ரணில் விக்கிரமசிங்க வலிந்து சென்று, மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை. அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர். எனவே, நாடா, அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியே முடிவெடுக்க வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுப் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மொட்டுக் கட்சி அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன், மொட்டுக் கட்சிக்குரிய அமைச்சுப் பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய ஜனாதிபதியின் முடிவு தவறு என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாலித ரங்கே பண்டார,
“ஜனாதிபதிப் பதவியை ரணில் விக்கிரமசிங்க பலவந்தமாகப் பெறவில்லை. வெற்றிவை வைத்து எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை. அவர்கள் (மொட்டுக் கட்சியினர்) தாமாக அழைத்தே எமது ஜனாதிபதிக்குப் பதவிகளை வழங்கினர். ஆக நாடா, அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியினர்தான் முடிவெடுக்க வேண்டும்.” – என்றார்.