இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
“ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து முன்வைத்த பிரேரணை மீதான விவாதம் சபையில் நேற்றுக் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
விவாதத்தின் முடிவில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அறிவித்தார்.
குறித்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அது ஆளும் கட்சியால் ஆமோதிக்கப்பட்டது. ஆளும் கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதை ஆமோதித்தார்.
எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரேரணை நிறைவேற்றும் வேளையில் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.