எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும். எப்பொழுதும் மக்களுக்கு உண்மையைச் சொல்லும் கட்சியாக இருப்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் ரீதியான பின்னடைவுகளைச் சந்திக்கின்றது. இருப்பினும், மக்களுக்கு உண்மையைச் சொல்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் பலமாகும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகளும் போட்டியிடும். இருப்பினும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே எனது முதல் கடமையாகும். அதன் பின்னர் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த முடியும்.” – என்றார்.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.