செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கூடைக்குள் ஒரு தேசத்தை சுமந்தவர் நாடற்றவரான நாள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

கூடைக்குள் ஒரு தேசத்தை சுமந்தவர் நாடற்றவரான நாள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

6 minutes read

மலையக மக்கள் உரிமை இழந்த நாள்: 1948 நவம்பர் 15 !
கூடைக்குள் ஒரு தேசத்தை சுமந்தவர் நாடற்றவரான நாள்:

——————————————————
ஐங்கரன் விக்கினேஸ்வரா

அந்நியரின் சுரண்டலுக்காய் தமது இரத்தத்தையே உரமாக்கி, இலங் கையின் பொருளாதாரத்தை வளப் படுத்திய 10 லட்சம் மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவரென பிரகடனப் படுத்தப்பட்ட நாள் 1948 நவம்பர் 15. 1948 நவம்பர் 15இல் மலைகளில்உரமாகி,தேயிலையில் இரத்தமாகி, கூடைக்குள் ஒரு தேசத்தை சுமந்தமலையக மக்கள் நாடற்றவரானநாளாகும். மலையகத்தைஎழில்கொஞ்சும் பூமியாக மாற்றியவலிசுமந்த மக்களின் வரலாற்றுப்பார்வையாக இக்கட்டுரை பிரசுரமாகிறது.

கூடைக்குள் தேசத்தை சுமந்த மக்கள்:
மலைகளில் உரமாகி, தேயிலையில் இரத்தமாகி, கூடைக்குள் ஒரு தேசத்தை சுமந்த மலையக மக்கள் நாடற்றவரான நாளே 1948 நவம்பர் 15.
அன்று மொத்தச் சனத்தொகையில் 11.7வீதமாக இருந்த இலங்கை சனத்தொகை அளவில் இரண்டாம் நிலையில் இருந்த மலையக தமிழர்கள் இன்று எண்ணிக்கையில் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும், இன்றைய நாள் வரை மூன்றாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுவதற்கும் இந்த சட்டமே காரணம் என்பது மறுக்கப் படமுடியாதது.
இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரமடைந்து வெறும் 285 நாட்களுக்குள் யாரெல்லாம் இலங்கை நாட்டவர்கள் என்பதை தீர்மானிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் யாரெல்லாம் இலங்கை பிரஜை கள் அல்ல என்பதை தீர்மானிப்பதற்கான சட்டமாக மாறி இந்த நாட்டின் இரண்டாவது அதிகளவான சனத்தொகையைக் கொண்டிருந்த சமூகத்தை இலங்கையில் நாடற்றவர்களாக்கிய கரும்புள்ளி வரலாற் றுடனேயே இலங்கை பாராளுமன்றம் தனது வரலாற்றைத் தொடங்குகின்றது. உலக வரலாற்றிலே விந்தையான, வேதனையளிக்கும் நிகழ்வான நவம்பர் 15, 1948 மனித உரிமைக்கு மறுப்புத் தெரிவித்த நாளாகும்.
கடல் கடந்து கவலை தீர வந்த மக்கள்:
 
1820 – 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில்
அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவந்தனர்.
1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தில்
குறைந்த கூலிக்காய் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் கைங்கரியத்தை உணராத இம்மக்கள் தமது மனித வளத்தை தியாகம் செய்து மலைகளைச் செய்து தேயிலைப் படர்ந்த சோலையாக்கினர்.
1823ல் அறிமுகப் படுத்தப்பட்ட காப்பி பயிரிட லுக்கு காரண கர்த்தாக்களாகி அந்நியனுக்குப் பெருலாப மீட்டிக் கொடுத்தனர். பிரிட்டிஷாரது ஆட்சியில் தென்னிந்தியாவிலிருந்து வறுமையைப் போக்க குடிபெயர்ந்த இம் மக்களின் வரலாறு வேதனை நிறைந்தது.
கடல் கடந்தால் கவலை தீரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கைத் தீவில் காலடி வைத்தவர்களுக்குக் காத்திருந்தது காடுகளும் கரடு முரடு நிறைந்த மலைகளுமே !
வலிசுமந்த பயணம் !
இந்தியாவில் இருந்து
வரும்வழியிலும், வந்துகுடியேறிய பின்னரும் இம்மக்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.
இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் – மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.
1880ல் காப்பியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பெரும் லாபம் மீட்டும் தேயிலைப் பயிரிடல் பிரிட்டிஷரால் ஆரம்பிக்கப் பட்டபோது மலையகத் தொழிலாளர்களது உழைப்பே தேயிலைச் செடிகளுக்கு உரமானது.
ஆனால் இவற்றின் மத்தியிலே இவர்கள் பட்டத் துன்பங்கள் என்றுமே முடிவுக்கு வரவில்லை. இந்தியாவிலே நிலச்சுவான்தாரர்களாலும், நாட்டாண்மையாலும் சுரண்டப்பட்டு, அடக்கப்பட்ட இம்மக்களை இலங்கையிலும் வெள்ளையனாலும், கங்காணிகளாலும் சொல்லாணா துனபத்துக்கு முகங்கொடுத்தனர்.
எழில்கொஞ்சும் பூமியாக !
காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை – தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர்.ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர்.
இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக இன்னமும் மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 – 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்தனர்.
வாழ்க்கையின் இருப்புக்காய், தமது உழைப்பை வெறுமனே விற்ற இவர்களது வாழ்வு, இலங்கையின் சுதந் திரத்திற்குப் பின், கூட இருந்தவரால் குழிபறிக்கப் பட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், சிங்களத்தேசியவாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
1947ஆம் ஆண்டில் இலங்கையின் முதல் பாராளு மன்றத் தேர்தலிலே ஏழு மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகளை மலையக மக்கள் தெரிவு செய்தனர். இடதுசாரிகளின் வெற்றிக்கு காரணமானவர்கள்.
இக் கட்டத்தில் பௌத்த வெறியைத் தூண்டி தேர்தலில் பங்கு கொண்ட டி. எஸ். சேனநாயக்கா தலைமையயிலான ஐக்கிய தேசியக் கட்சி மொத்த இடங்கள் 95ல், 42ஐ மட்டுமே பெற்றதோடு மொத்த வாக்குகளில் 39.5 சதவீதம் மாத்திரமே பெற முடிந்தது.
இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இந்நேரத்தில் தான் தமது பதவி நாற்காலிகளுக்கு ஆபத்தென உணர்ந்த சிங்கள பெருந் தேசியவாதிகள் தமது கபட நாடகத்தைக் கையாண்டனர்.
இலங்கைப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் சம்பாதித்துக் கொடுப்பவர்களாகவும் கடினமான உழைப்புச் சக்தியை மிகக் குறைந்த விலையில் விற்பவர்களாகவும் உயர்ந்து நின்ற இவர்களை ஸ்தாபன மயப்பட்ட தொழிலாளர்களாகப் பொது அரசியல் வாழ்வில் பங்கெடுக்க அனுமதிப்பது தமது எதிர்கால நலன்களுக்கு சாவுமணி அடிக்கும் என்பதனை உணர்ந்து சிங்கள அரசு, உலகின் வேறெந்த நாட்டிலும் காணப்படாத இக் கொடியச் சட்டத்தை அமுல்படுத்தியது.
பிரஜா உரிமை இழந்த மக்கள்:
இதனால் லட்சக்கணக்கான மலையக தமிழ் மக்கள் பிரஜா உரிமை இழந்து தேசிய உரிமை மறுக்கப்பட்டனர்.
பதவியில் அமர்ந்த சிங்கள அரசுகள் தொடர்ந்து மாறி மாறி பல்வேறு ஒடுக்கு முறைகளில் இம்மக்களை வதைப்படுத்தியதை வரலாறு காட்டும். கட்டாயக் குடியேற்றங்களாலும், கொடூர இனக்கலவரங்களாலும் தமது பாரம்பரிய மண்ணில் இவர்கள்
அகதிகளாயினர். அனாதைகளாக விரட்டப்பட்டனர்.
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்களாக இடம் பெயர்ந்த இம்மக்களுக்கு இந்தியாவிலும் “சிலோன்’” காரன் என்ற பட்டம் கிடைத்ததே தவிர வேறெந்த நன்மையும் ஏற்படவில்லை.
ஆயினும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தமது பாரம்பரிய மண்ணாக தாம் காலங்காலமாக வளப் படுத்தி வாழ்ந்த அந்த மண்ணையே நேசிக்கின்றனர். ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டு சிங்கள அராஜக ஆட்சி நடந்த
வேலையில் கூட மண்ணை மீட்க போராடியது வரலாற்றின் வெற்றிப் போக்கே எனலாம்.
பெரும் போராட்டங்களை நடாத்திய மக்கள்:
மலையக மக்கள் குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடாத்தினர்.
1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது.
1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் , பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய நாடற்றவர்களாக கருதப்பட்ட
மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கும் விசேட சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது.
இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. மலையக சமுதாயத்தினர் “நாடற்றவர்” என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.
முன்னேறும் மலையக மக்கள்:
 
கல்வியிலும் மலையக மக்கள் முன்னேறி வருகின்றனர். அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன. பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர்.  அத்துடன் மலையகத்தில் மருத்துவமனைகளை அமைக்க இந்திய அரசாங்கம் நிதியுதவிகளைச் செய்துள்ளதுடன், மலையக மாணவர்களுக்கான புலமைப்பரீசில் உதவிகயையும் வழங்கிவருகின்றது.
இந்திய அரசும் மலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு, வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டி உதவி வருகிறது.
மலையக மக்களின் சுகாதாரத்துறை, கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக் கொண்டு உதவி வருவதையும் நாம் காணலாம்.
விழித்து எழுந்த மலையகம் :
1940ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆட்சியை எதிர்த்து உயிர் துறந்த கோவிந்தன் போன்றோரும், 1976ல் தாம் வாழும் மண்ணை பறித்தெடுக்க யாருக்கும் உரிமையில்லை என்ற கோஷத்துடன் போராடி மரணித்த சிவனு-லட்சுமணன் போன்ற ஆயிரக் கணக்கானோர் வாழ்ந்து போராடிய மலையகம் விழித்து எழுந்ததால் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More