செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கார்த்திகைக் குறிப்புகள் | செ.சுதர்சன்

கார்த்திகைக் குறிப்புகள் | செ.சுதர்சன்

6 minutes read
01.
மழையோடு,
மாமழைக் கண்ணீரும் பொழிய…
ஓராயிரம் படையலிட்டோம்…!
தீவட்டியோடு..
மெழுகுவர்த்தியும்,
சிட்டியும்
மின்னியெழ…
ஓராயிரம் ஒளியேற்றினோம்..!
சிறுமாலைச் சரத்தோடு,
பெருமாலையும் சூட்டி…
ஓராயிரம் மலர் தூவினோம்…!
நீர் பேசவில்லை…!
எங்குள்ளீர்… எங்குள்ளீர்… என
எம் கண்ணீரைத் தூவினோம்..!
உம்மைப் புதைத்த கல்லறைகளை
உடைத்தெறிந்த பின்போ
தரிசு நிலமாயிற்றுத் தாய் மண்
என நினைந்தார் பாவியர்!
ஆயினும்…!
இனி யாரும் அழிக்கா,
மனக் கனவு நிலத்தில்
உமை விதைத்தேன்!
நீரோ…
முகங்காட்டி எழுகின்றீர்..!
அங்கே
புன்னகைக்கும் உங்கள் உதடுகளில்
வாசிக்கிறேன்…
நிஜமும் நிழலும் கலந்தொட்டிய
தீ உருவங்களாய் உங்களை என்றேன்…
ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது…!
02.
ஒரு கீதம் இசைந்து கசிய,
கண்ணீர் மழை பொழியும் பொழுதில்…
நாம் யாருக்காகக் காத்திருந்தோம்…!
‘நாளை வருவேன்’ என்றவரை..
‘இன்னும் இருப்பேன்’ என்றவரை..
‘நாளை உயிர்ப்பேன்’ என்றவரை..
தெருக்களில் சோக கீதம்,
அலையாய் பொங்கி,
கடலாய்ப் பெருகிய வேளை…
நீங்கள்
யாராயிருப்பீர்கள் என
நினைந்த வேளை…
வசந்த காலம் ஒன்றிற்காய்ப்
பூத்திருக்கிறீர்கள் எனவும்,
நீங்கள் பூக்களானபோது
தேனீக்கள் இசை மீட்ட…
மகரந்தப் பொடிகள்
நிலத்தைப் போர்வையாக்கின எனவும்,
அறிந்த வேளை…
உங்கள் உடல்களைத்
தழுவ முயன்றோம்!
திறக்கமுடியாச் சவப்பெட்டியுள்
பெருங்கனவை அணைத்தவாறு
உங்கள் கை மாத்திரம்
இருந்தது என்றேன்….
ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது!
03.
‘போவேன்’ என மொழி உதிர்க்காமலும்,
‘போகிறேன்’ எனக் கை அசைக்காமலும்,
‘போனேன்’ என்பதைச் சொன்னவரே…!
நீங்கள் போனீர்களா..?
இல்லை!
வந்தீர்களா…?
இல்லை!
வாழ்கிறீர்களா…?
என்று கத்தினேன்…
காற்றில்….
ஒரு தேசத்தின் பாடல்
வீர முழக்கமிட்டு,
மேகத்தைத் தழுவி,
சூரியனை வா என்று அழைத்து,
உதயத்தை
நிலத்தில் விரித்து,
துயிலை ஓட்டியது..
அப்போது என்னிடம்…
சிறுமலரும் இல்லை!
தீவட்டியும் இல்லை!
பூமாலையும் இல்லை!
என்னருகிலான
உங்கள்
வகுப்பறைப் புன்னகைகள்
மாத்திரமே இருந்தன..!
அவையும்… அப்போது…
பல வண்ணப் பூந்தோட்டங்களாயிருந்தன..!
சொரிவதற்கு முன்கொய்து
நெய்த என் மாலையும்
என் நேசராம் உமக்கே என்று
சூடினேன் படத்தில்..!
இங்குள்ளீர் என…
பொழியும் விழியில்
உம்மைக் கண்டேன்
என்றேன்…!
ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது..!
04.
அம்மாவின்
ஒரு சோற்றுப் பொதி…!
அதில்,
அள்ளி உண்ண அளையும்
உங்கள் கரங்களை
இப்போதும் அள்ளும் என் கண்கள்…!
மாமாவின்
ஓர் இனிப்பு…!
அதில் பங்குபோட,
பட்டுப் பதிந்த
உங்கள் பற் சுவடுகளை
இப்போதும் வாசிக்கும்
என் மனசு…!
ஆச்சியின் சேலை முடிப்புள்
அர்ச்சனைத் திருநீறு…!
உங்கள் நெற்றியில் பூசுவேன் எனக்
காத்திருந்த கிழவி…!
வருவேன் என்றுரைத்துப்
பறந்த நீங்களோ…..
எல்லையற்ற வானில்,
நான்கு திசைகளிலும்
சூரியன்களை ஒளிரவிட்டு,
மின்மினிகளால் கோலம் வரைந்து,
கணங்கள் தோறும் கண்களாய்
இருந்தபோதோ…
அம்மா ‘வருவான்’ என்றார்,
மாமா ‘வருவாள்’ என்றார்,
ஆச்சியோ ‘வருவார்கள்’ என்றார்…
காற்றோ சொன்னது
‘காற்றாகி வருவார்கள்’ என…
ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது…!
05.
உன் கடிதக் கடதாசி
சொருகிச் சுமந்தது,
அப்பா பின்னிக் கட்டிய
கிடுகு வேலி…!
அதைச் சுமக்கும்
கிளுவம் கதியால்களில்
மெல்லிய காலை ஒன்றில்…
அணில் ஓடித் திரிந்து
வாசித்த பின்புதான்
நள்ளிரவில்
நீ விட்டுச் சென்ற வரிகளை
என்னால் வாசிக்க முடிந்தது…!
ஒரு வயலின் தவிப்பை,
பெரு வனாந்தரத்தின் துக்கத்தை,
ஓர் ஆழ்கிணற்றின் கொதிப்பை,
பெரு கடல்மடியின் ஏக்கத்தை,
இன்னும்
இழந்த கிராமங்களின்
துயர் பிழியும் பாடல்களை
நீ எழுதியிருந்தாய்…!
உனது அம்மாவை
உனது அப்பாவை
உனது தங்கை தம்பியை
உனது செல்ல நாய்க் குட்டியை
இன்னும்…
உனது காதலியை என
எல்லோருக்குமாக என
எல்லாமே எழுதியிருந்தாய்..!
கடிதத்தை வாசித்து முடிக்கும்போதோ…
இறுதி வரியை,
‘இந்தக் கடிதத்தைச் சொருகும்
இந்த வேலி
எமக்கும் எமது அணில்களுக்கும் தேவை’
என எழுதினாய் என்றேன்…!
ஒரு கார்த்திகைப் பூ மலந்தது!
செ.சுதர்சன்
26/11/2023

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More