“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக எதிரணியினர் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போரில் மரணித்த தமது சொந்தங்களைத் தமிழர்கள் நினைவேந்தும்போது அதற்குப் புலி முத்திரை குத்த முடியாது. அதேவேளை, நினைவேந்தல் என்ற பெயரில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிப் புலிகளைக் கொண்டாடுபவர்களைக் கைது செய்யாமல் விடவும் முடியாது. இதற்குள் அரசியல் ஆதாயம் தேடவும் சிலர் முற்படுகின்றார்கள். புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. சிலரின் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு என்னால் அவர்களின் பாணியில் பதிலளிக்க முடியாது.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதிப் பதவியை நான் தக்க வைப்பதற்காக நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான ராஜபக்சக்களைப் பாதுகாத்து வருகின்றேன் என்ற கருத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர். ராஜபக்ஷக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. அவர்கள் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் அதற்குரிய தண்டனையை வழங்கும். உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வைத்துக்கொண்டு என் மீது பழிசுமத்த வேண்டாம். ராஜபக்சக்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென விரும்புபவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். என்னை விமர்சிப்பதால் எவருக்கும் எந்தப் பயனும் இல்லை.” – என்றார்.