அரபு -சர்வதேச அமைதிப்படை ?
மீண்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ?
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(காசாவில் அரபு -சர்வதேச அமைதிப்படை பிரசன்னத்தை விட மீள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலே சாத்தியமாக இடமுண்டு)
காசாவில் போருக்கு பின்னரான தீர்வுத் திட்டம் என்னவாக இருக்கும் என்பதில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. மேற்கு கரை (West Bank) போன்ற
பாலஸ்தீனிய அதிகாரம் திரும்புதல், அல்லது அரபு – சர்வதேச இராணுவ அமைதிப்படை பிரசன்னம் அல்லது இஸ்ரேலிய மறு ஆக்கிரமிப்பு ஆகிய அனைத்தும் காசாவின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் என இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அரபு -சர்வதேச அமைதிப்படை :
ஆயினும் அரபு -சர்வதேச அமைதிப்படை பிரசன்னத்தை விட மீள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலே சாத்தியமாக இடமுண்டு.
காசா போரின் உடனடி தாக்கம் என்பது, மத்திய கிழக்கு முழுவதும் மேலும் பரவும் பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கும் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேலில் ஊடுருவி தாக்கிய பிறகு, போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு முக்கிய கேள்வியாக, காசாவின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது இப்போது மிகவும் முக்கியமானது.
போர் முடிவின்பிறகு காஸாவில் என்ன அரசியல் ஒழுங்கு உருவாகும் என்பது தெளிவாக இல்லை. எவ்வாறாயினும், அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் பாலஸ்தீனிய அதிகார சபையின் (PA) பிரதிநிதிகள் முன்னணி பாத்திரத்தை வகிப்பது முக்கியம் என்று ஜோ பைடன் நிர்வாகம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆயினும் காசா பகுதிக்குள் இஸ்ரேல் புகுந்து ஹமாஸிடம் இருந்து கைப்பற்றுவது சட்டபூர்வமற்றதாகவே பல அரபு நாடுகள் கருதுகின்றன.
இந்த யுத்தம் முடிவடைந்தவுடன் காசாவில் ஹமாஸுக்குப் பதிலாக பாலஸ்தீனிய அதிகார சபையின் மஹ்மூத் அப்பாஸ் தலைமை ஏற்க சாத்தியக்கூறுகளை பைடன் அரசு சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும், இந்த யோசனை மிகவும் சிக்கலானது ஆகும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே அப்பாஸின் அரசுக்கு ஆதரவு என தெரிவிக்கின்றனர்.
காசாவில் அப்பாஸ் ஆதரவு இல்லை:
அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த திடீர் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடியின் எதிர்பாராத விளைவுகளில் ஒன்று, பல ஆண்டுகளாக மேற்குக் கரையில் ஆதரவை இழந்து வரும் அப்பாஸின் ஃபத்தா கட்சியின் ஆதரவு இன்னமும் குறைவதாகும். ஆனாலும் ஹமாஸின் புகழ் அதிகரித்தது என்பது உண்மையே.
அமெரிக்கா, இஸ்ரேலால் நியமிக்கப்பட்டவர் என்றும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் ஊழல் வேலைக்காரன் ‘அப்பாஸ்’ என்று பாலஸ்தீனியர்களிடையே பெயரைப் பெற்றுள்ளார். இதன் விளைவாகவே ஆளும் ஃபத்தாவின் பிரபல்யத்தில் பாரிய சரிவு ஏற்பட்டது.
மஹ்மூத் அப்பாஸ் ஒரு பாலஸ்தீனியத் தலைவராகினும், முற்றிலும் பயனற்றவர், மேலும் அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடமிருந்து உத்தரவை ஏற்றுக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான யூத குடியேற்றவாசிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தடுக்க இஸ்ரேல் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் காட்டாதபோது அல்லது இஸ்ரேலுடனான ஒத்துழைப்பால் மஹ்மூத் அப்பாஸ் அரசால்
என்ன நன்மைகள் உள்ளன என்ற பாலஸ்தீன மக்களின் ஆவேசமும் உள்ளது.
இந்த இக்கட்டான சமீபத்திய ஆண்டுகளில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதன் பிரதிபலிப்பாக, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மஹ்மூத் அப்பாஸ் அரசு ஆட்சியை ஏற்க காணும் வாய்ப்பு அதிகம் என்றே கருதுகின்றனர்.
ஆயினும் ஜனநாயக வழியில் காஸாவில் பாலஸ்தீனியர்களால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கருதப்படுகிறது.
காசா நகரில் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவின் மத்தியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து அகதிகளாக அல்லட்படும் வேளையில், எந்த ஒரு
அரபு நாட்டின் இராணுவம் உதவ இல்லை என்ற ஆதங்கமும் உண்டு.
போருக்கு பிந்திய நிர்வாகம்:
காசாவில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தை நிர்வகிக்கும் அரபு-சர்வதேச அமைதிப்படை பற்றி சில எண்ணங்கள் உள்ளன. ஆனால் அரபு நாடுகளின் கண்ணோட்டத்தில், பாலஸ்தீனத்தை இஸ்ரேலும் அதன் மேற்கத்திய ஆதரவு அரசுகளுமே நிர்வாகிக்க வேண்டிய நெருக்கடி என்றும், அதை நிர்வகிப்பது அரபு நாடுகளின் பொறுப்பல்ல என்ற கண்ணோட்டமும் உள்ளது.
மேலும், காசாவின் பாதுகாப்பு பொறுப்பில் அமர்த்தப்படும் எந்தவொரு அமைதிக்கான அரேபிய இராணுவப் படையும் பெரும் ஆபத்துக்களுக்கு உட்படும். பஹ்ரைன், எகிப்திய, அல்லது ஜோர்டானியப் படைகள் இஸ்ரேலின் பங்காளிகளாகவோ மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது.
இதனாலேயே போருக்குப் பிந்தைய காசா ஆளுகையின் பொறுப்பை அரபு – சர்வதேச அரசுகள் ஏற்றுக்கொள்வதில் சாத்தியங்கள் அரிதாக உள்ளன. காசாவில் தற்போதைய மோதலுக்குப் பிறகு பொதுமக்கள் இன்னும் அதிகமாக ஆத்திரத்துடன் இருக்கும் தருணத்தில், காசா ஆளுகையின் பொறுப்பை எந்த அரபு – சர்வதேச அரசுகள் ஏற்றுக்கொள்வதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகங்களும் உள்ளன.
காசாவில் மனிதாபிமான தேவைகள் அதிகமாக இருக்கும் வேளையில், மக்கள் ஆத்திரம் மற்றும் வெறுப்பு நிறைந்தவர்களாக உள்ளார்கள்.
டிசம்பர் மாத தொடக்கத்தில் பஹ்ரைனில் நடந்த ஐஐஎஸ்எஸ் (IISS) மனமா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஜோர்டானின் வெளியுறவு மந்திரி அய்மன் சஃபாடி பேசுகையில், காசாவிற்கு அரபு துருப்புக்கள் எதுவும் செல்லாது என்றும் அரபு நாடுகளை பாலஸ்தீன பொதுமக்கள் எதிரிகளாக பார்க்க வேண்டிய தேவையில்லை
என்றும் வலியுறுத்தினார்.
அரபு அமைதிப்படை பற்றிய யோசனை நிராகரிக்கப்பட வேண்டும் என்பதில் அரபு அரசாங்கங்கள் முழுதாக உடன்படுகின்றன என்று அம்மானின் தலைமை இராஜதந்திரி வலியுறுத்தினார். இந்த யோசனையை ஏற்பது இஸ்ரேலின் அரசாங்கத்திற்கு அரபு நாடுகள் உங்கள் குழப்பத்தை சுத்தம் செய்ய தயாராக இருப்பதாக தவறான செய்தியை அனுப்பும் எனவும் கூறினார்.
காசாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிப்பு:
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம், காசா ஆளுகையின் எதிர்காலத்தில் இஸ்ரேல் நேரடிப் பங்கை வகிப்பதைப் பற்றிக் குரல் கொடுத்துள்ளது.
ஆயினும் ஹமாஸுக்குப் பிந்தைய காலகட்டத்தில், காசா மீதான நேரடி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு திரும்பக் கூடாது என்று அமெரிக்க பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தது 18,000 பாலஸ்தீனியர்கள் காசாவில் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, இஸ்ரேல் காசாவில் தனது இராணுவப் பிரசன்னத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தால், காசாவின் எதிர்காலத்தில் தொடர் வன்முறை மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான செய்முறைக்கு வழிவகுக்கும். இதுவே இஸ்ரேலின் இராணுவத்திற்கு தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் ஏற்கனவே நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, ஆனால் ஒரு தந்திரோபாய ஆக்கிரமிப்பு என்பது அமைதிக்கான வெற்றியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அமைதி அங்கே திரும்புவது வெகு தொலைவில் தான்.
நிலைமை சீரடைவதற்கு நீண்ட காலம் ஆகும், என்று மிலனை தளமாகக் கொண்ட சர்வதேச அரசியல் ஆய்வுகள் நிறுவனத்தின் (ISPI) அறிக்கை விளக்கியுள்ளது.
இறுதியில், காசாவில் போருக்குப் பிந்தைய நிலைமைக்கு இஸ்ரேலிய தலைமை ஒரு தெளிவான, யதார்த்தமான மூலோபாயத்தை வகுக்கத் தவறிவிட்டது என்று உறுதியாகக் கூறலாம்.
அதேவேளை பாலஸ்தீனியர்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு திரும்ப முடியாது. அத்தகைய மறுசீரமைப்புக்கான பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் எங்கு வாழ வைக்கப்படுவார்கள் என்பதும் பாரிய ஒரு கேள்விக்குறியாகும்.
இரு நாடுகள் தீர்வு :
சர்வதேச சமூகம்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகளின் தீர்வு குறித்து அக்கறை காட்டுகின்றனவா என்பதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கொள்கை வகுப்பாளர்கள் ஹமாஸை மோதலுக்குக் காரணம் என்று மதிப்பிடுகிறார்கள். மோதலுக்கு ஹமாஸ் மட்டும் காரணம் அல்ல. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலை எதிர்க்கக் காரணமான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், காசாவிலோ அல்லது இஸ்ரேலிலோ எந்த நேரத்திலும் அமைதி இருக்காது என்பது வரலாற்றுப் பாடமாகும்.
காசாவில் இன்னோர் ‘நக்பா’ என்ற திட்டத்தை நிறைவேற்ற தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் முயலுமா என்பது பற்றி இப்போது கூற முடியாது விட்டாலும், இஸ்ரேல் அடைய விரும்பும் இன அழிப்பு இலக்குகள் ஆபத்தானவையாக தெரிகிறது.