-தோமஸ் சங்காராவின் பிறந்த நாள் நினைவாக (1949 டிசம்பர் 21) இக்கட்டுரை பிரசுரமாகிறது-
“ஆபிரிக்காவின் சே குவேரா” என்று அழைக்கப்பட்ட தோமஸ் சங்காராவின் (Thomas Sankara – ‘Africa’s Che Guevara’) புரட்சித் திட்டங்களினால் வறுமையில் வாடிய ஆப்பிரிக்க மக்களுக்கு அவர் ஒரு செயல் வீரராகவே என்றும் தெரிகின்றார்.
விடுதலை மற்றும் சமூக நீதிக்கான நமது சொந்த தேசிய வரைபடத்தை தீர்மானிக்கும்போது, ஆபிரிக்காவின் புரட்சியின் சின்னமான தோமஸ் சங்காராவைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும் அவசியமே.
ஆப்பிரிக்காவில் முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத பல சமூகப் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தினார். சங்காரா ஊழலை ஒழிக்கவும், காடுகளை வளர்ப்பதை ஊக்குவிக்கவும், பஞ்சத்தைத் தவிர்க்கவும், பெண்களின் உரிமைகளை ஆதரிக்கவும், கிராமப்புறங்களை மேம்படுத்தவும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் முயன்றார்.
அத்துடன் நாட்டின் பிரெஞ்சு குடியேற்றவாதப் பெயரான மேல் வோல்ட்டா என்பதை புர்க்கினா பாசோ ( Burkina Faso )“ஊழலற்ற மக்களின் நிலம்”என மாற்றினார்.
சங்காரா தனது 33வது அகவையில் 1983 ஆம் ஆண்டில் மக்கள் ஆதரவுடன் புர்க்கினா பாசோவின் ஆட்சியில் ஊழலை நீக்குவது, முன்னாள் பிரெஞ்சு குடியேற்றவாத ஆதிக்கத்தைக் குறைப்பது ஆகிய குறிக்கோள்களுடன் பதவிக்கு வந்தார்.
“ஆப்பிரிக்காவின் சே குவேரா” :
தோமஸ் இசிடோரே நோயல் சங்காரா (Thomas Isidore Noël Sankara) டிசம்பர் 21, 1949இல் பிறந்தவர்.
அக்டோபர் 15, 1987இல் கொல்லப்படும் வரை புர்க்கினா பாசோவின் இராணுவத் தலைவராகவும், மார்க்சியப் புரட்சிவாதியுமாக இருந்தவர்.
புர்க்கினா பாசோவின் அரசுத் தலைவராக 1983 முதல் 1987 வரை பதவியில் இருந்த ஆப்பிரிக்காவின் சே குவேரா என அழைக்கப்பட்ட சங்கரா
1970 முதல் 1973 வரை, மடகாஸ்கரில் உள்ள ஆன்சிராபே இராணுவ அகாடமியில் பயின்றார். அங்கு அவர் இராணுவ அதிகாரியாக பயிற்சி பெற்றார்.
1974 ஆம் ஆண்டில், அப்பர் வோல்டா இராணுவத்தில் இளம் லெப்டினன்டாக, மாலியுடன் எல்லைப் போரில் சண்டையிட்டு, ஒரு வீரனாக வீடு திரும்பிய சங்கரா பின்னர் பிரான்சிலும் பின்னர் மொராக்கோவிலும் மேற் படிப்பை படித்தார். அங்கு அவர் அப்பர் வோல்டாவைச் சேர்ந்த பிற இளம் மாணவர்களைச் சந்தித்து, பின்னர் அவர் இடதுசாரி அமைப்புகளுடன் நட்புறவை ஏற்பாடு செய்தார்.
பிரான்சின் குடியேற்ற நாடு புர்க்கினா பாசோ (Burkina Faso)
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடான புர்க்கினா பாசோ ஏறத்தாழ 274,200 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் எல்லைகளாக வடமேற்கில் மாலி, வடகிழக்கில் நைஜர், தென்கிழக்கில் பெனின், தெற்கில் டோகோ, கானா, தென்மேற்கில் கோட் டிவார் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் அவையின் ஜீலை 2019 மதிப்பீட்டின் படி இதன் மக்கள்தொகை 20,321,378 ஆகும்.
16.226 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் புர்கினா பாசோ உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடாக உள்ளது. அதன் மக்கள்தொகையில் 63% இசுலாத்தையும், 22% கிறித்தவத்தையும் பின்பற்றுகிறார்கள்.
பிரான்சியக் குடியேற்றம் காரணமாக, நாட்டின் அரசு மற்றும் வணிக மொழி பிரான்சியம் ஆகும். புர்கினாவில் 59 பூர்வீக மொழிகள் பேசப்படுகின்றன, இவற்றில் மிகவும் பொதுவான மொழியான ‘மூரே’ நாட்டின் 50% மக்களால் பேசப்படுகிறது.
இன்றைய புர்கினா பாசோவில் உள்ள மிகப் பெரிய இனக்குழுவான 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் குடியேறிய மோசி இனத்தவர் ஆவர். இவர்கள் ஊகடோகோ, தெங்கோடோகோ, யாத்தெங்கா போன்ற பலம்வாய்ந்த இராச்சியங்களை நிறுவினர்.
1896-இல், மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக பிரான்சின் குடியேற்றநாடாக்கப்பட்டது. 1958 திசம்பர் 11 இல், மேல் வோல்ட்டா பிரான்சிய சமூகத்திற்குள் ஒரு சுயமாக ஆளும் குடியேற்ற நாடாக மாறியது. 1960 ஆகஸ்ட் 5 அன்று முழுமையான விடுதலை அடைந்து மோரிசு யமியோகோ அரசுத்தலைவரானார்.
இதன் ஆரம்ப ஆண்டுகளில், நாடு உறுதியற்ற தன்மை, வறட்சி, பஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு உட்பட்டிருந்தது.
இந்நாட்டின் வரலாற்றில் 1966, 1980, 1982, 1983, 1987, 1989, 2015, 2022 ஆம் ஆண்டுகளில் பல்வேறு இராணுவப் புரட்சிகளும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்துள்ளன.
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை:
1976 இல் கமாண்டோ பயிற்சி மையத்திற்கு தலைமை தாங்கிய தாமஸ் சங்கஈரா தனது பணிகளில் பொதுமக்களுக்கு உதவுமாறு தனது வீரர்களை வலியுறுத்துவதன் மூலம் பிரபலமடைந்தார். உள்ளூர் இசைக்குழு உடன் சமூகக் கூட்டங்களில் அவர் கிட்டாரும் வாசித்து பிரபல்யமானார்.
1970கள் முழுவதும், சங்காரா இடதுசாரி அரசியலை அதிகளவில் ஏற்றுக்கொண்ட அவர் இராணுவத்தில் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் குழுவை ஏற்பாடு செய்தார். பல்வேறு இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் குழுக்களின் கூட்டங்களில், பொதுவாக கலந்து கொண்டார்.
1981 ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவக் குழுவின் சீர்திருத்தம் மற்றும் இராணுவ முன்னேற்றத்தின் (CMRPN) கீழ், சங்காரா மாநிலச் செயலாளராக பணியாற்றினார். 1982 இல், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மற்றும் CMRPM ஐக் கண்டித்தார். மற்றொரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மக்கள் பாதுகாப்பு கவுன்சிலை அதிகாரத்தில் அமர்த்தியது,
சங்காரா 1983 இல் பிரதமரானார் :
சங்காரா 1983 இல் பிரதமராக நியமிக்கப்பட்டார், ஆனால் விரைவில் பதவி நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், இது மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 4, 1983 இல், “ஆகஸ்ட் புரட்சி” அல்லது மக்கள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை ஏற்பாடு செய்தார். புரட்சிக்கான தேசிய கவுன்சில் (CNR) என்று தன்னை அழைத்துக் கொண்ட புதிய ஆட்சி 34 வயதான தாமஸ் சங்காராவை ஜனாதிபதியாக்கியது.
தோமசு சங்காரா ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையைத் தனது வெளிநாட்டுக் கொள்கையாக அறிவித்தார். வெளிநாட்டு நிதியுதவிகளைத் தவிர்த்தல், கடன்களைக் குறைத்தல், நிலம், மற்றும் கனிம வளங்களைத் தேசியமயமாக்கல், அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் செல்வாக்கைக் குறைத்தல் ஆகியன வெளிநாட்டுக் கொள்கைகளில் அடங்கின.
நாட்டில் வறுமையைப் போக்கல், நிலச் சீர்திருத்தம், நாடு தழுவிய எழுத்தறிவுத் திட்டம், 2.5 மில்லியன் குழந்தைகளுக்கு மஞ்சள் காய்ச்சல், தட்டம்மை போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் போன்ற பல முக்கிய திட்டங்களை இவர் அறிமுகப்படுத்தினார்.
நாடு பாலைவனமாதலைத் தடுக்க பத்து மில்லியன் மரங்கள் நடும் திட்டம், நிலக்கிழார்களின் வசமிருந்த நிலங்களை உழவர்களுக்குக் கையளித்தல், தரை வழி மற்றும் தொடருந்து சேவைகளை அமைத்தல் போன்ற வேறு பல திட்டங்களையும் இவர் அறிமுகப்படுத்தினார்.
பெண் உரிமை முக்கியத்துவம் :
அத்துடன், பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெண் உறுப்பு சிதைப்பு, கட்டாயத் திருமணம், பலதுணை மணம், போன்றவற்றை சட்டரீதியாக நிறுத்தினார். உயர் அரசப் பதவிகளுக்குப் பெண்களை நியமித்தார். இத்த்தகைய சமூகத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக தோமஸ் சங்காராவிற்கு நாட்டை அதிகார மேலாண்மையில் வைத்திருக்க வேண்டிய தேவையிருந்தது.
ஊழல் அதிகாரிகள், புரட்சி-எதிர்ப்பாளர்கள் போன்றோர்களுக்கு எதிராக புரட்சித் தீர்ப்பாயங்களில் வழக்குப் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அத்துடன், பிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சியின் தாக்கத்தால் உந்தப்பட்டு கியூபாவில் அமைக்கப்பட்டதைப் போன்ற புரட்சியைப் பாதுகாக்கும் குழுக்களை உருவாக்கினார்.
ஒரு நாட்டுப்புற நாயகன் :
தாமஸ் சங்காரா ஒரு நாட்டுப்புற நாயகனாக, அவர் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளை விட மக்களின் மனங்களை வென்றார். அவர் செய்தித்தாள்களை உண்மையைச் சொல்லி பிரசுரிக்க ஊக்குவித்தார். ஜனாதிபதியாக இருந்தபோது ஒற்றுமையின் செயல் வடிவமான
அரசாங்கத்தினை நடாத்தினார்.
அழியாத மக்களின் நிலம் :
33 வயதில், சங்காரா நாட்டின் தலைவரானதை தொடர்ந்து , ஒரு சக்திவாய்ந்த முதல் நடவடிக்கையாக, அவர் நாட்டின் காலனித்துவ பெயரை மாற்றினார். அத்துடன் வெளிநாட்டு உதவியை மறுத்தார். உங்களுக்கு
அவர் ஆப்பிரிக்க நாடுகளை தங்கள் குடியேற்றக்காரர்களிடமிருந்து சட்டவிரோத கடனை கூட்டாக நிராகரிக்கத் தூண்டினார். அவர் நிலம் மற்றும் கனிம வளத்தை தேசியமயமாக்கினார்.
மற்றய ஆப்பிரிக்க தலைவர்களைப் போல புர்கினா பாசோ முழுவதும் ஜனாதிபதியின் உருவப்படத்தை ஏன் வைக்க விரும்பவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் சொன்னார், “ஏழு மில்லியன் தாமஸ் சங்கராக்கள் உள்ளனர்” என இயல்பாகவே கூறுவார். மக்களுக்காகவே போராடி வாழ்ந்த தோமஸ் சங்காரா பிரான்சின் உளவுத்துறையின் திட்டமிட்ட ரீதியில் 1987இல் படுகொலை செய்யப்பட்டார்.
பிரான்சின் உளவுத்துறையால் படுகொலை:
1987 அக்டோபர் 15 இல் பிரான்சின் உளவுத்துறை உதவியுடன், பிளைசு கொம்பாரே என்பவர் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் சங்காராவின் ஆட்சியைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினார். அதே நாளில் சங்காரா படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சங்காரா “தனிப்பட்ட புரட்சியாளர்கள் கொலை செய்யப்படுவார்கள், ஆனால் அவர்களின் எண்ணங்களைக் கொல்ல முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
சங்காராவின் தலைமையின் கீழ், அவர் தேசிய அளவிலான எழுத்தறிவு பிரச்சாரம், விவசாயிகளுக்கு நிலம் மறுபங்கீடு, தொடருந்துப் பாதை, சாலைக் கட்டுமானம் மற்றும் சமூக பொருளாதார திட்டங்களைத் தொடங்கிய முற்போக்குவாதி.
சங்காராவின் ஆட்சியைக் கவிழ்த்த பின் அரசேறிய பிளைசு கொம்போரே 2014 அக்டோபர் 31 அன்று பதவியிலிருந்து நீக்கப்படும் வரை நாட்டை ஆட்சி செய்தார். சங்காராவின் ஆட்சியின் பிறகு, புர்கினா பாசோவில் மக்கள் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
100,000 மக்கள் தீவிர வறுமை, காலநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். 2010களின் நடுப்பகுதியில் இருந்து இசுலாமியத் தீவிரவாதிகளால் புர்கினா பாசோ கடுமையாக பாதிக்கப்பட்டது. “இசுலாமிய அரசு” (IS) அல்லது அல் காயிதாவுடன் இணைந்த பல அமைப்பகள் , மாலி, நைஜர் வரையிலான எல்லைகளைத் தாண்டி செயல்பட்டனர். இந்நாட்டின் 21 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர்.
2022 சனவரி 24 அன்று இராணுவமும் அதன் “பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கம்” அதிகாரத்தில் ஏற்பதாக அறிவித்தது. முன்னதாக, அரசுத்தலைவர் ரோச் மார்க் கபோரேயிற்கு எதிராக இராணுவம் சதிப்புரட்சியை நடத்தியது.
2022 இராணுவப் புரட்சி :
2022 சனவரி 24 அன்று இராணுவப் புரட்சியில், கலகம் செய்த இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அரசுத்தலைவர் ரோச் மார்க் கிறித்தியான் கபோரே கைது செய்யப்பட்டார்.இராணுவமும், அதன் “பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கமும்” (MPSR) லெப்டினன்ட் கர்னல் பால்-என்றி தமீபா தலைமையிலானஅதிகாரத்தில் இருப்பதாக அறிவித்தது. இவ்வாட்சிக் கவிழ்ப்பிற்கு ஐக்கிய நாடுகளும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தன.
இன்று புர்கினா பாசோவில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றால் , ஒரு கனகாத்திரமான தலைவரின் இழப்பின் பின்னால் ஒரு தேசமே சிதைவடைதை கண்கூடாக காணலாம்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா