புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்வு கண்டே ஆக வேண்டும்! – ரணில் திட்டவட்டம்

தீர்வு கண்டே ஆக வேண்டும்! – ரணில் திட்டவட்டம்

4 minutes read

“நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகளாகும். எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் என்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுகின்றேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்தந்துள்ளேன். எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளேன்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று (27) கலந்துகொண்டு உரையரறும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையான குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையை பாடசாலை அதிபர் ஏ.ஏ.ஷமூனினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

ஜி.சீ.ஈ. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.

கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, நினைவுப் புத்தகத்தில் ஒரு குறிப்பொன்றை பதிவிட்டதோடு, கல்லூரி ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:-

“நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசு ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். இந்த வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எம்முடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டில் நல்ல பொருளாதாரம் மற்றும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்து மக்களும் இலங்கையர்களே. இன்று எமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிங்கள அடையாளத்தையும், மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல நாம் செயற்படுகின்றோம். ஏனைய இனத்தினரையோ, மதத்தினரையோ ஒருபோதும் சிறுமைப்படுத்தக்கூடாது. நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக முன்னோக்கிச் சென்றால் மட்டுமே வளமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வுகளை வழங்கியுள்ளோம், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அத்துடன், ஏனைய இனத்தவர்களின் பிரச்சினைகளிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்த போதிலும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. அரசு என்ற வகையில் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்..

சிலர் தமது கிராமங்களை இழந்துள்ளனர். எனவே, 1985 ஆம் ஆண்டு வரைபடத்தின் பிரகாரம் செயல்பட முடிவு செய்துள்ளேன். அந்த வரைபடத்தின்படி, தற்போது எதாவது கிராமம் காடுகளால் மூடப்பட்டிருந்தால், அந்த கிராமங்களில் உள்ள மக்கள் குடியேற அனுமதிக்க வேண்டும். அதன் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஏற்கனவே அந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். இன்னும் சிலருக்கு அந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனியாக பணியாற்றி வருகின்றோம். அத்துடன், காணாமல்போனோர் பிரச்சினை, இழப்பீடுகள் உட்பட இதுவரையில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தாலும், வலுவான பொருளாதாரம் இல்லை என்றால், மீண்டும் அதே பிரச்சினைகள் தலைதூக்கும். மலையகத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயற்பட்டு வருகின்றோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம்.

அத்துடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது.

அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கின்றேன்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதில் சில தவறுகள் நடந்திருந்தன. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுகின்றோம். புத்தகங்கள் தருவிப்பது மற்றும் எகிப்தில் இருந்து போதகர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன. முஸ்லிம் மதக் கல்விக்கு அவை முக்கியமானவை என்பதால் அந்தப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது முன்வைக்கப்படவில்லை. இதுபோன்ற முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத பட்சத்தில், நாட்டில் புரட்சியை ஏற்படுத்த அழைப்பு விடுக்காதபட்சத்தில், கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டும். சட்டம் அந்த பாதுகாப்பை முழுமையாக வழங்க வேண்டும். இந்த விடயங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளேன். அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் முழு அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கின்றேன். அதற்கு முன், மதத் தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராய உள்ளேன். அதற்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.” – என்றார்.

முஸ்லிம் மதத் தலைவர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மில், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More