தமிழ் மக்களின் பாரம்பரியம் மிகு பண்டிகையான தைப்பொங்கல் பொருளாதார விழிப்பை ஏற்படுத்துகின்ற முக்கியமான நாள் என்று தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி, பொருளாதார எழுச்சியின் ஊடாகவும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி பொங்கட்டும்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல், தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் பெரும் மகிழ்வோடும் உணர்வோடும் அனுஷ்டிக்கின்றனர். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனவுரிமைக்காக போராடி வருகின்ற தமிழ் ஈழ மக்களின் வாழ்வில் சூழ்ந்த ஆக்கிரமிப்பு, இனவழிப்பு இருள் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று இந்நாளில் வேண்டுகிறேன். பொங்கல் என்பது எமதினத்தில் புரட்சியின் குறியீடாகவும் எழுச்சியின் குறியீடாகவும் முக்கியத்துவம் பெற்றமை பாரம்பரியமாகும்.
தமிழ் ஈழ நிலத்தில் சுதந்திரம் வேண்டி விடுதலைப் பொங்கலை கொண்டாடுபவர்கள் நாம். ஒவ்வொரு ஆண்டும் மலர்கின்ற போது விடுதலையின் ஆண்டாகவும் ஒவ்வொரு பொங்கலும் வருகின்ற வேளை அது விடுதலையின் பொங்கலாக அமைந்துவிடும் என்ற நம்பிக்கையிலும் அமையாதா என்ற ஏக்கத்திலும் கால யுகங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம். போரின் காயத்தில் இருந்து மீள முடியாமல் நீதிக்குத் தவிக்கும் ஓரினமாக இப் பூமிப் பந்தில் போராடும் தமிழ் ஈழ மக்களின் வாழ்வில் இனியேனும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
தமிழர் மாண்பின் நாள்
உலகப் பரப்பில், உணவைப் பகிர்ந்துண்ணல், இயற்கையை வணங்குதல், விவசாயத்திற்கு மதிப்பளித்தல் என்ற மகத்துவமான பண்புகளை கொண்டவர்களாக தமிழர்கள் மிளிர்கின்றனர். தைப்பொங்கல் என்பதில் சூரியனை வழிபடுதல் என்ற இயற்கையைப் போற்றும் மிகப் பெரிய மாண்பை தமிழர்கள் வெளிப்படுத்துகின்றனர். இயற்கையை அழித்தால் இயற்கையால் நீ அழிக்கப்படுவாய் என்ற மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையை தமிழ் இனம் காலம் காலமாக சிரம்மேற்கொண்டு வாழ்ந்துள்ளது.
அத்துடன் தைப்பொங்கல் வாயிலாக பகிர்ந்துண்ணுகிற மிகப் பெரும் பண்பாடு வளர்த்தெடுக்கபடுகின்றது. இந்த உலகில் வாழும் மக்கள் ஒருவருடன் ஒருவர் குடும்பமாக சமூகமாக இனமாக இணைந்து வாழ்வதும் பகிர்ந்துண்பதும் கொண்டாடுவதுமான மிகப் பெரும் வாழ்வியல் செல்நெறியை தைப்பொங்கல் வழியாக நாம் நீட்டிச் செல்வது பெருமைக்கும் மகிழ்வுக்கும் உரியதாகும். அத்துடன் பிராணிகளை மகிழ்ந்து அவைகளை மதிக்கும் மாண்பையும் இந்நாள் வெளிப்படுத்தி நிற்பதும் எமது பண்பாட்டின் செழுமையாகும்.
பொருளாதார எழுச்சியின் குறியீடு
அத்துடன் தமிழர்கள் பொருளாதார தன்னிறைவு கொண்டவர்களாக இருந்துள்ளமையின் பண்டைய கால வெளிப்பாடாகவும் தைப்பொங்கல் அமைந்துள்ளது. உழைப்பினதும் விளைச்சலினதும் தன்னிறைவினதும் அடையாளமாக அமைந்த பொங்கல், தமிழர்கள் மத்தியில் இருந்த தற்சார்ப்புப் பொருளாதாரப் பண்பாட்டின் குறியீடாகவும் இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் பேராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ நிழரசில் இத்தகைய பொருளாதார விழிப்பும் எழுச்சியுமே இலங்கை அரசின் பொருளாதார தடை என்ற யுத்த அவலத்தை உடைக்க எமக்கு துணை நின்றமை வரலாறு ஆகும்.
இக் காலகட்டத்தில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழ் ஈழத்தில் பல பொருளாதார விழிப்புக்களை ஏற்படுத்தி நடைமுறை வாழ்வில் அதன் சாதனைகளை அறுவடை செய்து தமிழீழத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றும் இலங்கை பாரிய பொருளாதார இடருக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், இன உரிமைக்கும் நில விடுதலைக்கும் தொடர்ந்து போராடுகின்ற இனமான ஈழத் தமிழர்கள் பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாகவே, எமது உரிமைகளை வெல்லும் போராட்டத்தில் பலமுற பயணிக்கலாம் என்பதையும் இந் நாளில் வலியுறுத்துகிறேன்.
விழிப்போடு போராடுவோம்
விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்று எம் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியதையும் இந்நாளில் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஏனெனில் பொருளாதார நெருக்கடியால் ஸ்ரீலங்கா பெரும் பின்னடைவுகளை சந்திக்கும் தருணத்தில் இமாலயப் பிரகடனம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் உரிமை உணர்வை ஒடுக்கி, சிங்களப் பேரினவாத அரசின் நலன்களை காத்துக்கொள்ள இன்றைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடும் சூழ்ச்சிகளை பின்னி வருகிறார்.
அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இனப்படுகொலை மற்றும் அரசியல் தீர்வு குறித்து வாய் திறக்காமல் வடக்கு பொருளதாரத்தில் வைத்திருந்த கண்ணும் ஸ்ரீலங்கா அரசு தமிழர்களின் பொருளாதாரத்தை அபகரித்து தன்னை வளர்க்க முனைவது குறித்தும் மிகுந்த விழிப்பை கொள்வோம் என்பதையும் வலியுறுத்தி நிற்கிறேன்…” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.