இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அக்கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சிறீதரனுக்குத் தனது வாழ்த்துக்களையும் சம்பந்தன் தெரிவித்தார்.
“இது மக்கள் பிரதிநிதிகளின் – கட்சித் தொண்டர்களின் தெரிவு. புதிய தலைவரான உங்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களும் நல்லாசிகளும் எப்போதும் இருக்கும். எங்களுடைய மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன்.” – என்றும் சம்பந்தன் மேலும் கூறினார்.
கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கட்சிக்குள் ஐக்கியம் அவசியம் என்பதையும் சம்பந்தன், புதிய தலைவரிடம் எடுத்துரைத்தார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் பல வருடங்கள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.