தீவுகளாலான ஒரு தீவு நாடு தான் (Maldives) மாலைதீவாகும். இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கே அமைந்துள்ள மாலைதீவு குடியரசு நாடு. நிலபரப்பு அளவிலும்,மக்கள் தொகை அளவிலும் தெற்காசியாவில் மிகச் சிறிய நாடாக விளங்கும் இந்நாடு, இந்திய பெருங்கடலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது.
இந்திய பெருங்கடலில் மாலைதீவு:
90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவில் 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்தமுள்ள 1,192 தீவுகளில், சுமார் 200-இல் மட்டும் மனிதக் குடியேற்றங்கள் காணப்படுகிறன. இதர தீவுகளில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாலைதீவு சராசரி கடல் மட்டத்திற்கு மேல் 1.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே, மாலைத்தீவுகள் உலகிலேயே மிகவும் தட்டையான நாடாகும். காலநிலை மாற்றத்தால்,கடல் மட்டம் தொடந்து உயரும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மாலைத்தீவின் இருப்பை எதிர்காலத்தஇல் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
சோழர்கள் ஆட்சியில் மாலைதீவு:
வரலாற்று ரீதியாக, சோழர்கள் ஆட்சிக் காலத்தின் கீழ் நீண்ட காலமாக மாலைதீவு இருந்தது. இந்தத் தீவுகளில் பின்னர் 1153-ல் இஸ்லாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இருந்து மாலைதீவுகள் போர்த்துக்கேயர், அதன் பின் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, அதன்பின் ஆங்கிலேயர்களின் செல்வாக்கினுள் இருந்தாலும், இஸ்லாத்தின் செல்வாக்கு அங்கு தொடர்ந்து நீடித்துவருகிறது.
1965 இல் சுதந்திரம்:
1965-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற மாலைத்தீவில், மீண்டும் சுல்தான் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது. அதன்பின் 1968 ஆம் ஆண்டு, சுல்தான் மன்னராட்சி கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1970களில் சுற்றுலாத் துறையின் மூலம் வலுவான பொருளாதார கட்டமைப்பை இந்நாடு உருவாக்கியது. 1978 – 2008 வரை குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் ஹயூம் (Maumoon Abdul Gayoom) ஆட்சிக் காலம் இந்த வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இவரின் ஆட்சியின் பிற்பாதியில், ஜனநாயக சீர்த்திருங்கள் கோரப்பட்டன. அதிகாரவர்க்க எதிர்ப்பியங்கள் உருவாகியின. இதில், முக்கியமானவர் மொகமது நஷீத் (Mohamed Nasheed). பத்திரிகையாளரான இவர் Gayoom ஆட்சிக் காலத்தின் போது 16 முறை சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஆழமான, அடிப்படை யதார்த்தம் கொண்ட ஜனநாயகத்தை கோரிய இவரது போராட்டம் வெகுசன இயக்கமாக உருவானது. 2003ல் மாலத்தியர் ஜனநாயகக் கட்சியை (Maldivian Democratic Party) தொடங்கினார். தொடர் போராட்டங்களின் விளைவுகளால், 2008ல் மாலை தீவின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.
மொகமது நஷீத் தலைமையிலான கட்சி 2008ல் ஆட்சியமைத்தது. இருப்பினும், 3 ஆண்டு காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே, 2012ல் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. 2012ல் அப்துல் ஹயூம் ஒன்றுவிட்ட சகோதரரான அப்துல் யமீன் ஆட்சி அமைத்தார். இந்த காலகட்டத்தின் தான், இந்திய-மாலைதீவு இருதரப்பு உறவில் தூரம் அதிகரித்து.
இந்தியா மாலை தீவின் அடையாளங்களை கரைத்து விட முயற்சிப்பதாகவும், அதன் இறையாண்மையை ஒடுக்க முயற்சிப்பதாகவும் மாலைதீவு மக்களிடையே கற்பிதங்கள் கொண்டு வரப்பட்டன. சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளிடையே அப்துல் யமீன் தலைமையிலான அரசு நெருக்கம் கொள்ள தொடங்கியது. அத்துடன் காமன்வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறத் தொடங்கியது.
“இந்தியாவிற்கு முதல் முன்னுரிமை” கொள்கை :
2018ல் இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்கும் இப்ராஹிம் முகமது சோலே அதிபராக பொறுப்பேற்றார். “இந்தியாவிற்கு முதல் முன்னுரிமை” என்பதுதான் தமது அரசின் கொள்கை என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு, மாலத்தீவின் அதிபராக டாக்டர் முகமது முயிசு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் பரப்புரையில் , மாலை தீவில் இருந்து இந்திய ராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவோம் என்பதே இவரின் முதுலாவது முழக்கமாக இருந்து வந்தது.
அதேபோன்று, அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சீனா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு தனது முதல் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார்.
பொதுவாக, மாலைதீவு அதிபர்கள் தங்களது முதல் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை வருவது வழக்கம்.
இன்றைய பொருளாதாரம் கடல்சார் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, இந்திய பெருங்கடல் வழியே தான் அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் தங்களுக்குள் பண்ட பொருட்களை பரிமாறிக் கொள்கின்றன.
இந்திய பெருங்கடலில், அமைந்துதுள்ள முக்கிய இரண்டு நீரிணைகளை தக்க வைத்துக் கொள்வதில் மாலைதீவு முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக, ஹோர்முசு நீரிணை (Straits of Hormuz) உலகில் பயன்படுத்தப்படும் மசகு எண்ணெயின் 20% கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றது.
மற்றோன்றான, மலாக்கா நீரிணை உலகின் மிக முக்கிய கப்பல் பாதையாக விளங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா ஆகிய ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளை இணைக்கின்றது. இந்த இரண்டு நீரிணைகளும் தற்காத்துக் கொள்ள இந்திய- சீனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதகே போன்று, இந்தியாவின் 50 சதவிகித வெளிநாட்டு வர்த்தகம், 80% மசகு எண்ணெய் இறக்குமதி, மாலைதீவுடன் நேரடியாகவோ, மறைமுறகமாவோ தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இரு நாட்டு மக்கள் பயனடையும் வகையில் இரு தரப்பு உறவுகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“இந்தியா வெளியேறு” கொள்கை:
இந்தியாவுக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் மாலைதீவுகள் இந்தியாவின் முக்கிய அண்டை நாடாகக் கருதப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் “அண்டை நாட்டுக்கு முன்னுரிமை”(Neighbourhood First Policy) கொள்கையின்கீழ் மாலைதீவுகளுக்குச் சிறப்பு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு மாலைதீவுகளின் அதிபராகப் பதவியேற்ற முகமது முய்ஸு (Mohamed Muizzu) சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று கூறப்பட்டது.
இந்தியாவுக்கு முதல் இடம் கொடுக்கும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகவும் முன்பு அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் அதிபர் திரு. முய்ஸு சீனாவிற்கு 5 நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார். அத்துடன் மாலைதீவுகளும் சீனாவும் வர்த்தகம், பொருளியல் சார்ந்த பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இரு நாட்டு சர்ச்சை:
இந்தியாவுக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான சர்ச்சை தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்த மாலைதீவுகளின் மூன்று துணையமைச்சர்கள் தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதனால் மேலும் கசப்படைந்தது.
துணையமைச்சர்களின் கருத்துகள் தனிப்பட்டவை, அவை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று மாலைதீவு அரசு விளக்கியது.
மாலைதீவு சுற்றுலாதுறை பாதிப்பு:
இந்தியாவுக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளின் விளைவாக, இந்தியாவின் சுற்றுலாதுறை பயணிகள் மாலைதீவுகளுக்குச் செல்வதற்கான விமானப் பதிவுகளை ரத்துச் செய்துள்ளனர். இதனால் மாலைத்தீவுகளின் சுற்றுலாதுறையைப் பாதிக்கும் நோக்கில் லட்சத்தீவுகள் பிரபலப்படுத்தப்படுவதாகச் கருதி பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லட்சத்தீவுகளின் அழகு:
கேரளத்திற்கு அப்பால் உள்ள அரேபியக் கடலில் இந்தத் தீவுகள் உள்ளன. லட்சத்தீவுகள் சுமார் 40 தீவுகளைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் லட்சத்தீவுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் திரு. மோடி அண்மையில் லட்சத்தீவுகளுக்குச் (Lakshadweep) சென்றிருந்தார். அந்தப் படங்களையும் அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். மாலைதீவுகளின் சுற்றுலாதுறையைப் பாதிக்கும் நோக்கில் லட்சத்தீவுகள் பிரபலப்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது.
இந்தியா – மாலைதீவு இடையிலான சர்ச்சையினால் மாலைதீவுகளின் சுற்றுலாதுறை பாரியளவில் பாதிப்படைந்துள்ளது. இந்நாட்டின் முக்கிய பொருளாதாரம் சுற்றுலாத் துறையாகும். இதன் விளைவு சீனாவுடன் மாலைதீவின் வர்த்தக உறவு நெருக்கமடைகிறது.
இந்திய பெருங்கடலில் சீனாவின் கடலாதிக்கம் மேலும் வளுப்பெறும் வகையில், மாலைதீவின் வர்த்தக உறவு நெருக்கமடைந்துள்ளது.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா