“புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை அடக்கி ஆளும் இந்த ரணில் – ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் அணிதிரள வேண்டும். இதற்கான அரசியல் சமர் ஜனவரி 30 ஆம் திகதி (நாளை) கொழும்பில் ஆரம்பமாகும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது:-
“ரணில்- ராஜபக்ச ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. இதனால் மக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டங்களை முடக்குவதற்குப் பொலிஸார் களமிறக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் நாடாளுமன்றத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இந்தச் சட்டமூலத்துக்குச் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. சர்வதேசமும் எதிர்த்துள்ளன.
பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அல்ல, நாட்டு மக்களையும், ஊடகங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒடுக்குவதற்காகவுமே இப்படியான சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன. அடுத்து புனர்வாழ்வுச் சட்டமூலமும் ஆபத்தானது. அதுகூட அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படும்.
இவ்வாறு மக்களை அடக்கி ஆளும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றார்.