செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை புட்டினின் அரசியல் எதிரி நவால்னி ‘நீண்டகால சிறையில்’ மர்ம மரணம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

புட்டினின் அரசியல் எதிரி நவால்னி ‘நீண்டகால சிறையில்’ மர்ம மரணம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

(புட்டினுக்கும் அவரது அதிகாரத்துக்கும் அஞ்சாதவர். ரஷ்யாவுக்கு வெளியேயும் அபிமானிகளை சேர்ந்திருந்தவர். நவால்னியின் துணிச்சலும், சாதுரியமும் ரஷ்யாவுக்கு வெளியேயும் எப்போதும் பேசப்படுவர்)

மாஸ்கோவில் இருந்து கிழக்கே 1900 கிலோ மீட்டர் தொலைவில் ஆர்ட்டிக் பகுதியில் (Arctic Circle) உள்ள ‘போலார் வொல்வ்’ (Polar Wolf) தண்டனைக் காலனியில்
மூன்று தசாப்த சிறைத்தண்டனை அனுபவித்து வந்த புட்டினின் அரசியல் எதிரி நவால்னியின் மர்ம மரணம் மேற்குலகின் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பல ரகசியங்களை உலகின் பார்வையில் தொடர்ந்து வெளிப்படுத்தியதால், ரஷ்யாவுக்கு வெளியில் வைத்தே அவர் மீது பல முறை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அவற்றில் பல விஷம் சார்ந்த தாக்குதல்கள் என்பதால், அப்போதெல்லாம் மருத்துவமனையில் உயிருக்கு போராடி நவால்னி மீண்டிருக்கிறார்.

சிறையில் மர்ம மரணம் :

தற்போது ரஷ்ய அதிபர் புட்டினின் பிரதான அரசியல் எதிரியும், ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்சி நவால்னி, ரஷ்ய சிறையில் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

“பல அரசியல் கைதிகளைப் போலவே நானும் ஆயுள் தண்டனையில் அமர்ந்திருக்கிறேன். இந்த ஆட்சியின் ஆயுட்காலம் மூலம் என் வாழ் நாள் அளவிடப்படுகிறது” என ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி முன்பு தெரிவித்திருந்தார்.

கடந்த வருட நவம்பர் இறுதியில் அலெக்ஸி நவால்னி சிறையில் இருந்து காணாமல் போனதாக அவரது ஆதரவுக்குழு தெரிவித்தது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

புட்டினின் அரசியல் எதிரி நவால்னி :

47 வயதான அலெக்ஸி நவால்னியின் வழக்கறிஞர்கள் கடந்த வருட நவம்பரில் சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறினர். பின்னர் சிறையில் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறியப்பட்டது.

தீவிரவாத சமூகத்தை உருவாக்குதல், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டதாக நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே மோசடி மற்றும் அவர் மறுக்கும் பிற குற்றச்சாட்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு சிறைகளில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு நவால்னி இருப்பதாக கூறப்பட்டது.
ரஷ்யாவின் எல்லைக்கு வெளியே மட்டுமன்றி உள்ளேயும் எதிர்ப்பாளர்களை விரும்பாதவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீதான அவரது விமர்சனத்தை அடக்குவதற்கான அரசியல் சூழ்ச்சி முயற்சி என்று அவரது கைது மற்றும் சிறைவாசம் என நவால்னியின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக புதினுக்கு அரசியல் ரீதியாக பெரும் அழுத்தத்தை கொடுத்தவரே அலெக்சி நவால்னி. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் புட்டின் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அலெக்சி நவால்னி இறந்தது ரஷ்ய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நவால்னி இறந்த தகவல் உறுதியானபோதும், அதன் பின்னணி காரணம் உள்ளிட்ட தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
அவர் இறந்ததாக கூறப்பட்டாலும், கடந்த சில மாதங்களாகவே நவால்னி சிறைவாசம் குறித்தும், அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வியும் நவால்னியின் ஆதரவாளர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

எதிர்கால ரஷ்யாவின் தலைவர்:

‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவரும், வழக்கறிஞர், ஊழல் எதிர்ப்பாளர், என பல முகம் கொண்டவர் அலெக்ஸி நவால்னி. எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டவராகவும், புட்டினுக்கு நிகரான மக்கள் வசீகரமும் கொண்டவர்.

முக்கியமாக புட்டினுக்கும் அவரது அதிகாரத்துக்கும் அஞ்சாதவர். ரஷ்யாவுக்கு வெளியேயும் அபிமானிகளை சேர்ந்திருந்தவர். நவால்னியின் துணிச்சலும், சாதுரியமும் ரஷ்யாவுக்கு வெளியேயும் எப்போதும் பேசப்படுவர்.

புட்டினின் ரஷ்யாவுக்கு அப்பாலான சொத்துக்களை அம்பலப்படுத்தியதில், அலெக்சி நவால்னி அரசின் கடும் சீற்றத்துக்கு ஆளாகி, கிட்டத்தட்ட வாழ்நாள் சிறைவாசத்துக்கு உட்பட்டார்.

சிறையில் நவால்னி இறந்தால் அந்தப் பழி அரசின் மீதே விழும். தற்போது சிறையில் நவால்னி இறந்திருப்பது அவரது தனிப்பட்ட உடல் நிலை சார்ந்த காரணங்களினாலா அல்லது உளவுச்சதி ஏற்பாடா என்பது தெரியவில்லை. அப்படியே இருப்பினும் அவை வெளியுலகுக்கு தெரியவும் வாய்ப்பில்லை.

தற்போதும் நவால்னி ஆதாரவாளர்கள், சிறையில் நவால்னி கொல்லப்பட்டதாகவே புட்டின் அரசு மீது குற்றம்சாட்டி உள்ளனர். ஆட்சி மற்றும் அதிபர் மாற்றத்துக்கு இடமின்றி தொடர்ந்து அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால், புட்டின் மீதான அரசியல் எதிரிகளின் விமர்சனம் ரஷ்யாவில் இப்போது காணப்படுகிறது.

மார்ச் 2024 இல் ரஷ்ய தேர்தல்:

மார்ச் 2024 இல் ரஷ்யாவின் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடப் போவதாக புட்டின் அறிவித்தன்
பிறகு நவால்னியின் மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடும புட்டின் குறைந்தபட்சம் 2036 வரை அவர் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஆட்சியின் போது புட்டினின் சட்டப்பூர்வத்தன்மைக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக
நவால்னி இருந்தார். அத்துடன் அரசாங்க எதிர்ப்பு தெரு ஆர்ப்பாட்டங்களை பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்த சூழலில், தனது 47 வயதில் மர்ம மரணமடைந்திருக்கிறார் அலெக்ஸி நவால்னி. ரஷ்யாவின் அவிழ்க்க முடியாத மர்மங்களில் ஒன்றாக தற்போது அலெக்ஸி நவால்னியின் மரணமும் சேர்ந்திருக்கிறது.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More