புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இணுவையூர் மயூரனின் தாயக நினைவுகளை சுமந்த கவிதைகள்

இணுவையூர் மயூரனின் தாயக நினைவுகளை சுமந்த கவிதைகள்

3 minutes read

இந்நூலின் முதலாவது கவித்தலைப்பு “தக்கன பிழைக்கும் ”
“எத் தடை வரும்போதும்
தன் நிலை மாறாமல் …
எதிர்கொண்டு நின்று பார் …”

இது நூலாசிரியரது வாழ்விலும் இவை மிளிர்ந்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்

சிறு பராயத்தில் தாய் மண்னை விட்டு வந்தாலும் வேற்று மொழிகளை படிக்க வேண்டிய தேவை வந்தபோதும், தன் தாய் மண்ணின் நினைவுகளை சுமந்து திரிந்தது மட்டுமன்றிதமிழ் மொழியிலும் திறன் கொண்டு வளர்ந்து இன்று ஒரு நூலை தந்திருக்கின்றார்.

இந்த கவிநூலை படைத்திருக்கும் மயூரனின் தமிழ்ப்பற்று
தமிழ் மொழியை கற்பது கடினமானது என்று முயற்சிக்காமலே தள்ளிவைக்கும் இரண்டாம் தலைமுறையினருக்கும், தமிழ்மொழியை திட்டுதிட்டாய் கதைப்பதையே பெருமையாய் சொல்லி தமிழ்மொழியின் ஆழங்களை அறியவிடாமல் மூழ்கடிக்கும் பெற்றோர்களிற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைகின்றது.

தமிழர் பாரம்பரிய வாழ்வியலின் நிளமான பக்கங்களை நிழலாகத்தொடர்ந்து வரும் பேரெச்சங்களான நினைவுகளை அழகான வரிகளில் மட்டை வேலிகளைப்போலவே அடுக்கடுக்காய் வரிந்திருக்கின்றார் நூலாசிரியர்.

“பூவரசமிலை வாசத்தோடு
புசித்த நினைவுகளும்…
கள்ளக்கொய்யா பிடுங்கலும்
பொக்கிசமாய் இன்று …..”

ஆனால் இன்று ஈழத்தில் வாழும் இந்த சந்ததி கூட குழந்தைபருவத்தை அனுபவிக்கமுடியாது புத்தகச் சுமைகளை சுமக்கின்றனர் என்பதும்
நாம் அறிந்ததே.
“இந்த சந்ததி காணாத வாழ்வு ..
என் மனம் முழுக்க பரவிக்கிடப்படன..” என்று தன் வரிகளால் காலத்தை பாடிவைக்கின்றார் .

எப்படித்தான் எங்கள் பண்பாட்டின் இனிய நினைவுகளை பாடித் தீர்த்தாலும் இன்றைய நிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கலாச்சார பிரழ்வுகளையும் அதனை எம் இனமே கொண்டாடித் தீர்ப்பதன் வலிகளையும் மனமுடைந்து ஏமாற்றங்களால் வருந்தி வரிகளாக்கியிருக்கின்றார் மயூரன்.

வெஷாக் என்னும் தலைப்பிலும் இன்னும் சிலவற்றிலும் இப்படி நீள்கின்றது.

“பட்டி தொட்டி எங்கும்
பகட்டான வளைவுகளும்
ஆமத்துறு கையில்
கட்டி விடும் நூல் பெரும்
பாதுகாப்பு கவசமாய்
வைரவ கோயில் பூசாரியின் மகன்
வியந்து சொல்கிறான்”

பிறிதொரு இடத்தில்

“ஊர் கூடி இழுத்த தேர்
ஊர் காவல் படை
இழுக்க “….

முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் புலம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் துடித்ததுடிப்பை கவிஞரின் வரிகளில் இப்படி புலம்புகின்றார்

“பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும் தெரு விருந்தோம்
பலனேதும் கிடைக்காமல்

மீளாத்துயரில் தமிழினம் தவித்தபோது மீட்டுவிடாத மனிதர்களை மட்டுமின்றி வற்ராப்பளை தெய்வத்துடனும் சண்டை போட்டுக் கொள்கின்றார் வரிகளால்.

“வெட்கம் கெட்டவள்
தன் வீதி வழி பிணக்குவியல்
குவிந்திருக்க விடுப்புப் பார்த்தவள் இப்போ வீதியுலா வருகின்றாள்”

இது நியாயமான கேள்விதானே..

கடல் கடந்து வாழ்ந்தாலும் தாம் வாழ்ந்த இணுவையூரின் ஒற்றையடிப்பாதையெங்கும் உலாத்தி இனிப்பு புளியடியில் இளைப்பாறி
குணமலர் ரீச்சரின் குணமறிந்து வரவைத்திருக்கின்றார்
அந்த ஊரில் வாழ்ந்திராத என்னையும். இதுவே மயூரனின் எழுத்துக்களில் நான் காணும் சிறப்பும் கூட….

கடும் வரட்சியில் தத்தளிக்கும் மீனாகி இன்று தன் ஊரிலும் அழிக்கப்படும் விழுமியங்களைப்பார்த்து இவ்வாறு நொந்து போகின்றார்

“இந்த முறை போனபோது பெருத்த ஏமாற்றம்
அவரும் இல்லை அந்த மரமும் இல்லை”

தான் வாழும் சுவிஸ் நாட்டின்
இயற்கை அழகை இரசித்துப்பாடியிருந்தாலும் எம் நாட்டிற்கு அது ஈடாகாது என்பதை நாசூக்காக சொல்லி நகர்கின்றார் இவ்வாறு..

முல்லைப் பூவின் நிறத்தில்
வெள்ளைபணி…
தள்ளி நின்று பார்த்திடத்தான்
கள்ள மனமும் ஏங்குதிங்கே”…

கொள்ளை அழகுதான் பனி
கிலி கொள்ள வைக்குது,
கடும் குளிரை நினைக்கையில்……

இவரின் அனேக கவிதைகள் தாய்மண்ணை பிரிந்து அந்த நினைவுகளிற்குள் தினமும் அரிபட்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் அனேக புலம்பெயரிகளின் குரலாக ஒலிக்கின்றது…

இக்கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் கருக்கள் எனக்கும் மிக நெருக்கமாகவே சுழல்வதால் என்னமோ இந்நூலை படித்து முடித்தவேகத்தில் அதிலிருந்து வெளிவரமுடியாமல் உள்ளக்கிடக்கையில் உறைந்து கிடக்கின்றன பல வரிகள்.

புலம்பெயர் வாழ்வின் வாழ்வியலை வாழ்க்கைச் சுமைகளை மூடி மறைத்து எம் பகட்டு வாழ்விற்கு கதைபேசும் புலம்பெயரிகளின் அறியப்படாத பக்கங்களை துணிச்சலாக பாடியிருப்பது பாராட்டப்பட வேண்டியதே.

என்ன வாழ்கை இது என்னும் தலைப்பில்

“ஆம்ஸ்ராங்கைவிட அதிக ஆடையிருக்கும்.
கிலிசை கெட்ட வாழ்க்கை இது
நினைக்க நினைக்க கொதி வரும்…
இப்படி தொடர்கிறது ……

புலம்பெயர்ந்தோர் வாழ்வு
புகழ் மிக்க வாழ்வென புகழுவோர்
புண்பட்டுக் கிடக்கும் _எம்
உணர்வுகளை அறிவரா…..”

“என் பிள்ளை இன்னொர் நாட்டின் சுகந்திர
அடிமையாய் பிறந்ததும்
அவன் பிள்ளை தான்
யாரென்று தெரியாத
இனமொன்றின் வாரிசுஆவதும்……”

கவிஞரின் ஆதங்கம் ஆங்காங்கே பல இடங்களில் சிந்திக்கிடக்கிறது

இந்த சுட்டெரிக்கும் நினைவுகளை எல்லாம் இதமாக்கி போகின்ற தன் குழந்தைகளின் வருகையை
“புதல்வி புராணம்” அழகாய் தோகை விரிகின்றது ..
“”வாசல் வந்து காலைப் பற்றி
அவள் வரவேற்பதற்காகவே
வலிந்து வலிந்து
வெளியே சென்று வருவேன்”…

பணம் பறிக்கும் நாடு சுவிஸ் நாடு என தெரிந்திருந்த பலருக்கு பதின்மூன்று மாதச்சம்பளம் என்ற கவிதையை படித்தால் பலத்த ஏமாற்றம் வரும்.

“பால்,பாணை சுமந்த பவளக்கொடி கதை போல
பாரினில் நாம் வாழும் வாழ்க்கை கேளீர்”
கொடுத்தவனே அத்தனையும் பறித்துக் கொள்ள
கோவணம் மட்டும் இங்கு மிச்சம் கேளீர்”….

செம்பகத்தின் குரலிலும் என்னும் கவியிலும் இப்படி சொல்கிறார்.
“நாளை காசுக்காய் கரையப்போகும் வேடந்தாங்கல் சைபிரசின்..

நியமான வரிகளை தயக்கமின்றி சொல்லும் இணுவையூர் மயூரனின் கவிதைகள் வாசிக்கப்படவேண்டியவையே.
எல்லாக் கவிதைகளையும் நான் தொட்டுச் செல்லவில்லை
நாற்பது தலைப்புகளில் எழுத்தப்பட்டுள்ளன, பல கவிதைகள் ஏதோவொரு நெருடலை படிப்பவர்களின் மனதிலும் புதைத்து விடும் என்பதில் ஐயம் இல்லை.

அட்டைப்படமும் நூலாக்கமும் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் கையகப்படுத்தும் கறுப்பு,வெள்ளை புகைப்படங்கள் படிப்பதற்கு இதமாக அமைந்தாலும் பின் அட்டையில் எழுதப்பட்டுள்ள வாசங்களின் எழுத்தின் அளவை சற்று பெருப்பித்திருந்தால் காண்பவர்களின் பார்வைக்குள் இலகுவில் சிக்கிவிடும் என்று எண்ணத்தோன்றியது .

இக் கவிதைகள் தாம் வாழும் சமூகத்துடன் பின்னிப்பிணைந்திருக்கும் உயிர்ப்பான உணர்வுகளின் வெளிப்பாட்டிலிருந்து பிறந்திருக்கின்றன.

மயூரனின் மொழிக்கையாட்சி மிகவும் இலகுவான நடைமுறைத்தமிழில் பதிவு செய்திருப்பதும், புதுக் கவி நடையில் வாசிக்கப்படுவதும் அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒர் வாய்ப்பை அளிக்கின்றது.

நாகரீக வளர்ச்சியும் தொழில்நுட்ப விரிசலும் எம் பாரம்பரியங்களை தின்று கொண்டிருந்தாலும் அந்த நினைவுகளை பொக்கிசமான பதிவுகளாக்கி தந்திருக்கும் இணுவையூர் மயூரன் பாடலாசிரியராகவும் அறியப்பட்டவர் இலக்கிய உலகில் பயணங்கள் நீள என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

“ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் “(கவிதைகள்)
பக்கங்கள் 128
ஆசிரியர்- இணுவையூர் மயூரன்
மார்ச் 2020
வெளியீடு-அகநாழிகை
அனைத்துலக விற்பனை உரிமை
மகிழம் படைப்பகம்.
நன்றி தாயகமுரசு.

மிதயா கானவி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More