– ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஐம்பதாண்டு ஆசியான் – அவுஸ்திரேலிய உறவை நினைவுகூரும் விதமாக மார்ச் 4-6 மார்ச் 2024இல் மெல்போர்ன் நகரில் “ஆசியான் – அவுஸ்திரேலியா உச்சி மாநாடு” (ASEAN – Australia Summit) நடைபெற்றது.
ஆசியான் கூட்டமைப்பு :
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு(Association of Southeast Asian Nations) என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும்.
இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன. அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டன.
பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்குகின்றன.
2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது வருட நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளின் 30 வருடப் பூர்த்தியையும் கொண்டாடியது. 2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதென 26 ஓகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆசியான் – அவுஸ்திரேலிய மாநாடு:
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு உடனான அவுஸ்திரேலியாவின் கூட்டாண்மையானது, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துடனான நட்புறவின் மையமாகும். அவுஸ்திரேலியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் நமது பொருளாதாரங்கள் மூலம் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. நிலையான, அமைதியான மற்றும் செழிப்பான ஒரு பிராந்தியத்தை உருவாக்க இம்மாநாடு உதவுகிறது.
முதலில் இந்த உச்சிமாநாடு 2021 இல் நிறுவப்பட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து ஆசியான்-அவுஸ்திரேலியாவின் அடுத்த 50 ஆண்டுகால ஒத்துழைப்பை எதிர்நோக்குவதற்கு தலைவர்களை ஒன்றிணைக்க முயல்கிறது.
இந்த சிறப்பு உச்சி மாநாடு பொருளாதார, காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு முயற்சிகளை வளர்ப்பதற்கு வளர்ந்து வரும் தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்க உதவுகிறது.
மூன்று நாள் உச்சிமாநாட்டில் வணிகம், வளர்ந்து வரும் தலைவர்கள், காலநிலை மற்றும் தூய்மையான ஆற்றல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகிய முக்கிய விடயங்களை மையமாகக் கொண்ட நிகழ்வுகள் மூலம் மேலும் உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
அவுஸ்திரேலியா, ஆசியானுடன் நீண்டகால உறவு கொண்டுள்ளது. அது ஆசியானுடன் ஆகப் பழமையான கலந்துரையாடல் நாடாகவும் 1974ஆம் ஆண்டு முதல் இருந்து வந்துள்ளது.
அவுஸ்திரேலியா உதவி:
இந்தச் சிறப்பு மாநாடு முதன்முதலில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்றது. அது இரண்டாம் முறையாக இவ்வாண்டு நடைபெற உள்ளது. ஆசியான் அமைப்பும் அவுஸ்திரேலியாவும் கடந்த 2021ஆம் ஆண்டு முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவ அமைப்பை ஏற்படுத்தின. எரிசக்தி உருமாற்றம், ஆட்கடத்தலை முறியடிப்பது ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது இதன் நோக்கம்.
மாநாட்டில் ஆசியான் – அவுஸ்திரேலியத் தலைவர்கள் உறவுகளை வலுவாக்கவும் விரிவுபடுத்துவதும் குறித்து வழிவகைகளை ஆராய்வர், குறிப்பாக பசுமை, மின்னிலக்கப் பொருளியல் தொடர்பாக என்று கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு ஆசிய பொருளாதார வியூகத்தின் முக்கிய துறைகள் மற்றும் கருப்பொருள்கள் மீது கவனம் செலுத்தும் “மூர் அறிக்கை” (The Moore Report) திட்டபபடி தென்கிழக்கு ஆசியா இடையே அதிக வர்த்தக முதலீட்டுக்கு மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுடன் பலதரப்பு பேச்சுவார்த்தை நடந்தன.
மெல்பேர்ணில் நடைபெறும் ஆசியான் விசேட மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாட்டு தலைவர்களுடன் அவுஸ்திரேலிய பிரதமர் பலதரப்பு சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
ஆசியான் நாடுகளுடனான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் பசுமை மற்றும் காலநிலை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
சிங்கப்பூர் பிரதமருடன் பேச்சுவார்த்தை:
சிங்கப்பூர் – அவைஸ்திரேலியத் தலைவர்களும் ஆசியான் – அவுஸ்திரேலிய மாநாட்டில் சந்தித்துள்ளனர். இந்த சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மார்ச் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை மெல்பர்ண் சென்றுள்ளார்.
அவரது மூன்று நாள் அவுஸ்திரேலிய பயணத்தில் அவர் பிரதமர் ஆண்டனி அல்பனிசைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நிகழ்வு 2015ஆம் ஆண்டு கையெழுத்தான சிங்கப்பூர் – அவுஸ்திரேலிய முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தத்தின்கீழ் இடம்பெறுகிறது.
அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனிஸ் சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேலைவாயப்பு, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இருதரப்புச் சந்திப்பில் இருநாட்டுப் பிரதமர்களும் தங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தொடர்பாகவும், பிராந்திய அனைத்துலக நிலவரம் தொடர்பாகவும் கருத்துப் பரிமாறிக்கொள்வர்.
அத்துடன், பிரதமர் லீ ஐம்பதாண்டு ஆசியான்-அவுஸ்திரேலிய கலந்துரையாடல் உறவை நினைவுகூரும் விதமாக ஆசியான் – சிங்கப்பூர் உச்சநிலை மாநாட்டிலும் கலந்துகொள்கின்றார்.இதன்போது சிங்கப்பூர் வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனிஸ் தாய்லாந்து பிரதமருடனான சந்திப்பின்போது காலநிலை மாற்றம், பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் பற்றி ஆராயப்பட்டுள்ளன. அத்துடன் மலேசிய பிரதமருடனான சந்திப்பின்போது காசா நிலைவரம் பற்றியும் பேசப்பட்டுள்ளது.