பாரத விடுதலையில் பெண்களின் உண்ணாவிரதம்:
அநீதிக்கு சவால் விடுத்த அன்னை பூபதி !
தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட முதல் பெண்மணி பத்மாசனியாவார். ஆயினும் அவர் இந்திய தேசத்தின் விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணிப்பை அளித்த
பத்மாசனி வரலாற்றில் மறக்கப்பட்ட பெண் போராளியாகிவிட்டார்.
200 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசத்தின் சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தால் உருவானது. பத்மாசனி எனும் பெண் இந்த சுதந்திர போராட்டத்தில் தன் குழந்தைகளையே தியாகித்த ஒரு வீரத்தாயின் வரலாறு இன்று பலருக்கும் தெரியாது.
பாரதியாரின் பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் தமிழ் நாட்டில் பரப்பிய முதல் பெண்ணும் இவர்தான். நாட்டின் விடுதலைக்காக சிறை சென்ற முதல் பெண்.
மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் சோழவந்தானில் 1897-ல் பிறந்தவர்.
மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர். சீனிவாச்வரதனும் மகாகவி பாரதியாரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
ஒருமுறை பாரதியார் ‘உன் சொத்தை விற்றேனும் பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு’ என்று கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே தனது சொத்தை விற்று பாரதியாருக்கு பணம் அனுப்பி வைத்தவர் வரதன். அத்தனை நெருக்கம்.
பாரதியார் பாடல்களை நாம் எல்லா இடங்களிலும் இன்று கேட்கலாம். ஆனால் அன்றைக்கு அப்படியில்லை. பாடல்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அதை தெரு தெருவாக பாடி, பஜனைகளில் பாடி மக்கள் மத்தியில் எழுச்சி ஊட்டியவர்கள் சீனிவாசவரதனும் பத்மாசனியும்தான்.
1922-ல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக வரதன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்.
அதுவரை கணவருக்கு உறுதுணையாக இருந்த பத்மாசனி முழுமூச்சாக நாட்டின் விடுதலைக்காக தானும் போராட்டத்தில் குதித்தார். தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை இவரை வந்து சேர்ந்தது.
கணவர் சிறைக்கு சென்றபின் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார்.
தினமும் மாலை நேரத்தில் பாரதியார் பாடல்களை பாடியபடியே வீடுவீடாகச் சென்று கதர் விற்று வருவார். சுதந்திரத்திற்கு எதிராக இருப்பவர்களையும், ஆங்கிலேய அரசிடம் வேலைப் பார்ப்பவர்களையும் கூட கதர் வாங்க வைத்துவிடுவார். அவர் பேச்சில் அத்தனை வல்லமை இருந்தது.
பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்று இவரின் பேச்சால் பல பெண்களை சுதந்திர போராட்டத்திற்கு இழுத்து வந்தது.
1930-ல் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பத்மாசனி மதுரை ஜான்சி ராணி பூங்கா முன் பேசிய பொதுக்கூட்டத்தில், இவர் பேசியதற்காக ஆங்கிலேய அரசு பத்மாசனியை கைது செய்து ஆறு மாத சிறையில் தள்ளியது.
பத்மாசனி சிறையில் உண்ணாவிரதம்:
சிறையில் உணவு இன்றி தொடர் உண்ணாவிரதம் இருந்தார். கர்ப்பவதிக்கான ஊட்டச்சத்து உணவு இல்லாததாலும் உடல்நிலை மோசமாக இருந்ததாலும் கர்ப்பம் கலைந்தது.
சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார்.
அன்றைய காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில்
பத்மாசனி பேசும் போது அனல் தெறிக்கும். இவரின் பேச்சு என்றாலே அக்கம் பக்க ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அவரது குரல் வெண்கலம் போல் கணீரென்று இருக்கும். பேச்சில் உணர்ச்சியும் வேகமும் குவிந்துக் கிடக்கும். மரக்கட்டைக் கூட வீறுகொண்டு எழும். தொண்டர்கள் பாதி கூட்டத்திலே ஆவேசமாக எழுந்து, இப்போதே வெள்ளையர்களை கூண்டோடு அழித்துவிடுகிறோம் என்று புறப்படுவார்கள். அத்தகைய வீரம் அவரது பேச்சில் இருக்கும்.
நாட்டின் விடுதலையை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தனை செய்யாத பத்மாசனிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்திருந்தன. தேச சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அவருக்கு இரண்டு குழந்தைகளுமே ஒரு வயதை அடையும் முன்னே இறந்து போயிருந்தனர்.
அனல் தெறிக்கும் வீரப் பேச்சு :
காவிரி நடையாத்திரையில் விடுதலையைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று கலந்து கொண்டார். வழிநெடுக சுதந்திரப் பிரச்சாரம், பாரதியார் பாடல்கள், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளின் வரலாறு என்று நடைப் பயணம் முழுவதும் சுதந்திர வேட்கை ஜோதி சுடர்விட்டு எரிந்தது. எட்டு மாத கர்ப்பத்துடன் 48 மைல் தூரம் நடந்தே வந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. கடுமையான குளிர், பாதையோரம் தங்குவதற்கு நல்ல இடம் வேறு இல்லை. பிறந்த மூன்றாவது நாளில் அந்த குழந்தையும் இறந்தது. அம்மையாரின் உடலும் மோசமாக பாதிக்கப் பட்டது. ஓய்வுக்காக உடல் கெஞ்சத் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்தார்.
உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கினார். பத்மாசனியின் பேச்சு மகாத்மா காந்தியடிகளையும் கவர்ந்திருந்தது. பெல்காமில் காந்தி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக பத்மாசனியை காந்தி அழைத்திருந்தார்.
மூன்று குழந்தைகளை இழந்தவர் :
விடுதலைக்காகவே தனது மூன்று குழந்தைகளையும் பலிகொடுத்த இந்த தாய் இந்தியாவின் விடுதலையை பார்க்காமலே இந்த மண்ணை விட்டு மறைந்தார். தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் நாட்டைப்பற்றியே சிந்தித்த இவர் கடைசியில் 14.1.1936 இந்திய சுதந்திரத்தை காணாமலேயே
விண்ணுலகம் சென்றார்.
மணிப்பூரில் போராடிய ஷர்மிளா இரோம் :
இந்திய சுதந்திரத்தின் பின் ஒரு பெண்
14 வருடங்களாக உண்ணா விரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அரசாங்கமே தலை கீழாக நின்று முயற்சி எடுத்து தடுக்க முற்பட்டது.
1942-ம் ஆண்டு மணிப்பூரின் இம்பால் பகுதியில் பிறந்த ஷர்மிளா இரோம் சிறுவயதிலிருந்தே சமூகச் சிந்தனை யோடும், சமுதாயம் சார்ந்த கட்டு ரைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தவர்.
2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் மலோம் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பொதுமக்களை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதைப் பார்த்த மனித உரிமைப் போராளியான ஷர்மிளா இதனைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்புஅதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து 14 வருடங்களாக உண்ணா விரதம் இருந்த ஒரு பெண் போராளியாக உலகின் கவனத்தை ஈர்த்தார்.
அவர் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கியதை அடுத்து
ராணுவம் அவரை கைதுசெய்தது. அப்போதும் அவர் உண்ணா விரதத்தைக் கைவிடவில்லை. ஆனால், அவர் இறந்துவிடுவாரோ என்கிற பயத்தில் ராணுவம் அவரை விடுதலை செய்தது.
அதன்பிறகும் அவர் உண்ணா விரதத்தை கைவிட்டபாடில்லை. உண்ணா விரதம் தற்கொலைக்கான முயற்சி என ஷர்மிளாவை சாப்பிட வைக்கும்படி உறவினர்களை மிரட்டியது ஆளும் அரசு. ஆனாலும்
ஷர்மிளாவோ தன்கோரிக்கையைக் கைவிடவில்லை.
15 ஆண்டு உண்ணாவிரதம் :
உடல் உபாதைகளினால் அவரது ஒவ்வொரு உறுப்பும் வலுவிழந்தது. அப் போது அவரது மூக்கின் வழியே திரவ உணவு மட்டும் செலுத்தப்பட்டது. 14 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த உண்ணாவிரதத்தை பார்த்த மணிப்பூர் மக்கள், அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று அழைத்தனர். ‘ நான் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் போராளி, அரசியல்வாதி அல்ல’ என்றுகூறி மறுத்தார்.
ஷர்மிளாவின் உண்ணா விரதம் 15-ம்ஆண்டில் அரசின் தலையீட்டால் நிறுத்தப்பட்டாலும், “என் உயிர் போனாலும் பரவாயில்லை. என்றாவது ஒரு நாள் என்பகுதி மக்களின் நிலை மாறும்’ என்கிற விடாமுயற்சியில் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஷர்மிளாவின் விடா முயற்சி உலகின் கண்கள் மணிப்பூர் மக்களுக்காக விழிப்படைந்தது என்பது உண்மையே.
மட்டு நகரில் அன்னை பூபதி:
பாரத விடுதலையில் பெண்களின் உண்ணாவிரத போராட்டங்கள், எத்தகைய வீரியம் மிக்கதாக இருந்ததோ, அதற்கு ஒப்பாக ஈழத்தில்
அன்னை பூபதியின் சாகும்வரை போராட்டம் எழுந்தது.
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும், என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஈழத்தமிழர் மிக நெருக்கடியான வேளையைச் சந்தித்த காலம் அது.
இந்த இராணுவ ஆக்கிரமிப்பு பாரியளவில் கூறுமளவுக்கு அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படையினர் ஒரு புறம், சிறிலங்காவின் இராணுவம் மறு புறம் இவையிரண்டிற்கும் துணையாக நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒரு புறம் என்று ஈழத் தமிழினம் இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது.
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தின் காலம் அது. இத்தனை அபாயங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஒரு சாதாரணப் பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அகிம்சை வழியில் ஆரம்பித்தார் அன்னை பூபதி.
தியாக உணர்வும் – நெஞ்சுரமும்:
தியாக மனப்பான்மையும், நேரிய நெஞ்சுரமும், அவருக்கு இருந்துள்ளதுடன், இறப்பை அடுத்தும், தமது நோக்கை அடைய அன்னையர் முன்னணி தளராது, என்று அன்னை பூபதி அவர்கள் தியாக உணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.
1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை காலை 10:45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு, ஈழக் காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணியளவில் கலந்து பரவியது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா