அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இருக்கின்றது. அதுபோதும் எனக் கூறவில்லை. ஆனால், அதை ஏற்றுக்கொள்வதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களுக்குள் பலர் அதை மறுக்கின்ற தன்மை இருந்தாலும் கூட இந்த 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு வருகின்ற அரசுகள் எல்லாம் எவ்வளவு பின்னடிக்கின்றது என்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.
இந்தநிலையில், இதை விட நாம் பெரிதாகப் பெறுவோம் என்று சொல்லி படிப்படியாக எங்களுடைய இனம் அதாவது வடக்கு – கிழக்கு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு வருகின்றார்கள். இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு வசதியாக கனடா விசா, இலண்டன் விசா கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வருடத்தில் வடக்கு – கிழக்கில் இருந்து ஏறக்குறைய சுமார் 20 ஆயிரம் நாட்டை விட்டு சென்றுள்ளார்கள்.
ஆகவே, கையில் இருப்பதையாவது இறுக்கமாகப் பற்றி வடக்கு – கிழக்கைக் கட்டியெழுப்பும் முயற்சி எடுக்க வேண்டும். இது ஒரு ஜதார்த்தமான முடிவு. சரியான முடிவு எனச் சொல்லவில்லை. சரியான முடிவை நோக்கிச் செல்ல வேண்டும். அதன்போது இருப்பதை இறுக்க பற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மையான நிலைப்பாடு.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் 5 கட்சிகள் ஒற்றுமையாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் இயங்கி வருகின்றோம். ஒவ்வொரு காலத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு காரணங்களுக்காக அந்த ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அதில 90 வீதம் தேர்தலுக்காகத்தான். ஆனால், நாங்கள் தேர்தலுக்காக ஒற்றுமைப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே இது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நோக்கி நகர்வதற்காக ஒற்றுமையாக அமைக்கப்பட்ட அமைப்பு இது. தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் இதில் இணையக்கூடிய வகையில்தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளும் இதில் வந்து இணைவார்கள். அந்த ஒற்றுமையின் மூலமே நியாயமான தீர்வைப் பெற முடியும். அதற்குத்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும். அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளை அடைய முடியும்.” – என்றார்.