மேற்படி மாணவன் கடந்த 3 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதையடுத்துப் பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கினார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை அந்த ஆசிரியைக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாணவனைத் தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலுக்குக் கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த ஆசிரியை, “உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை. அதனாலேயே அடித்தேன். அடிக்கும்போது அவர் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது” என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா? என்றும் ஆசிரியை கேட்டிருந்தார்.
பெற்றோர் காயமடைந்த மாணவனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை வழங்கியதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸாரால் நேற்று மேற்படி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் ஆசிரியை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர், வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினர், வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர் ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.