செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிலமொழி | நதுநசி

நிலமொழி | நதுநசி

5 minutes read

நடுநிசியாகியும் இன்னும் நித்திரைக்குப் போகாது வேலையில் மூழ்கிப் போயிருந்தாள் துவாரகி.

“என்னக்கா? இன்னும் நித்திரை வரல்லையோ? நான் போய்ப் படுக்கப் போறேன்.”

சொல்லிக் கொண்டவாறே இருக்கையை விட்டு எழுந்தாள் கவியரசி.பரனில் தடியால் இருக்கைகள் செய்திருந்தனர்.

இன்று அதிகாலை முதல் வேலையில் மூழ்கியவர்களுக்கு இன்னமும் வேலையை முடிக்க முடியவில்லை.

” ம்ம்”

அவ்வளவுதான்.வேறு சொற்களை சிந்த மறுத்தது துவாரகியின் உதடுகள்.கவனம் அவளது வேலையில் இருந்தது.

படுக்கையில் விழுந்த கவியரசி போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டபடி.

” எத்தனை நாள் ஆச்சு.போர்வையை போர்த்திப் படுத்து.இன்டைக்கென்டாலும் ஒரு நல்ல நித்திரை கொள்ள வேண்டும்.”

மனதில் எண்ணிக்கொண்டாள் கவியரசி.

துவாரகியின் புதிய அணி உருவாக்கப்பட்டு ஒரு வாரம் தான் இருக்கும்.ஒரே அலைச்சல்.எதிரியின் நிலங்களெல்லாம் திரிந்த கால்கள் இன்று அதிகாலை தான் பாதுகாப்பான நிலம் மீண்டு இருந்தன.

” கவி! நாலுமணிக்கெல்லாம் எழும்பிடோனும்”.

” ஏனக்கா? ……”

மெல்ல கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த கவியரசி

” இன்டைக்கென்டாலும் நல்ல நித்திரை கொள்ளுவம் என்டு நினைச்சனக்கா”

குரலில் ஒரு தவிப்பு தாகம் இருந்தது.

கவியரசி சின்ன குழந்தை போலவே எல்லா நேரமும் இருப்பாள்.பேச்சும் கூட அப்படித்தான்.

புரிந்து கொண்ட துவாரகி

” சரி.சரி.படும். நான் பாத்துக்கொள்ளுறன். ”

பேச்சில் ஆதரவை கலந்திருந்தாள் துவாரகி. அவளது குரலின் ஓசை கவியரசிக்கு ஆறுதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

படுத்ததும் நித்திரையாகிவிட்டாள். அவளைப் பார்த்த துவாரகிக்கு மெல்ல சிரிப்பு எட்டிப் பார்த்தது. குழி விழுத்தி புன்னகையை தோன்ற வெட்கிக் கொண்டான துவாரகியின் கனங்கள்.

நல்ல காற்று வீசியது.காற்றில் கலந்திருந்த உப்பு வாடை மூக்கை தூண்டியது.அலையும் கரை தழுவி மெல்ல சங்கீதம் பாடியபடி இருந்தது.

கடற்கரையோரத்தில் நின்றிருந்த நாவல் மரமொன்றில் பரன் போட்டு இருந்தார்கள்.

காவல் கடமையில் இருந்த நிலமொழி தேனீரோடு வந்தாள்.

” துவாரகியக்கா ”

திரும்பிய துவாரகி ” சொல்லுங்கோ” என்றாள்.

” தேத்தண்ணியக்கா”

” நான் துவாரகி” என்றவள் சிரித்தவாறே தேனீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள்.

பெண்சிலை வரைதாளினுள் வைத்து மூடிவிட்டு நிமிர்ந்து இருந்தாள்.

தாளின் மீது தலைவரின் சிந்தனைத் துளிகள் எனப் பெயரிட்டிருந்த அந்த புத்தகத்தையும் எடுத்து வைத்து விட்டாள்.

அவளது கால்கள் நாவல் மரக் கொப்புக்களில் உதைத்தவாறு இருந்தன.எந்த நொடியிலும் அவள் தாவி கீழே குதித்துக் கொள்ளும் வண்ணம் இருந்தது அது.

அவளது இடுப்பு பட்டிக்கு மேல் கருவி தாங்கிய மற்றொரு பட்டியும் ஒட்டி இருந்தது.எப்போதும் அது அப்படியே இருக்கும்படி வைத்திருப்பாள் துவாரகி.

தேனீர் கோப்பையை எடுத்து தேனீரை பருகினாள்.

” நல்லாயிருக்கு நிலமொழி.”

” நான் நல்லா தேத்தண்ணி போடுவன்.வரக்குள்ள தேத்தண்ணிக்கடையில தான் நின்டனான்.”

என்றாள் நிலமொழி.

நீண்ட தலைமூடி.கருகரு என்று இருக்கும் அவளுக்கு.இறுக்கமாக பின்னி மடித்து வளைத்து கட்டியிருந்தாள். அவளது தலைமுடியைப் பற்றி அடிக்கடி அவளது அணியினர் பேசிக்கொள்வதுண்டு.

துவாரகியின் அணிக்கு வந்ததும் நிலமொழியின் நீண்ட கூந்தலை வெட்டிவிட வேண்டிய கட்டாயம் இருந்தது.

புத்திசாதுரியமாக முடிவுகளை எடுத்துக்கொள்ளும் துவாரகி நிலமொழியின் கூந்தலை வெட்டிவிட கட்டளையிடவில்லை.
மாறாக எப்படி தலை கட்டவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தாள்.

” என்ன சொல்லுறாய்? அப்ப நீ பள்ளிக்கூடம் போகவில்லைய? ”

வார்த்தைகளை மட்டாக கொட்டும் துவாரகி உதிர்ந்து விட்டாள் ஏக்கம் கலந்த குரலில்.

“இல்லையக்கா.நான் பத்தாமாண்டோடே படிப்பை விட்டுட்டன். அக்கா ஏழாமாண்டோட விட்டுட்டா”

” ஏன்?”

” அம்மாவுக்கு ஒரு கால் இல்லை.கிளாலியில இருந்து ஆமிக்காரர் செல்லடிக்கைக்க எங்கட வீட்டுக்கு மேலயும் ஒண்டு விழுந்து வெடிச்சப்ப நடந்தது.”

“அதில தான் எங்கட அப்பாவும் செத்தவர்.”

சொன்னவள் சுற்றும் முற்றும் ஒருதடவை தன் பார்வையை சுழல விட்டாள்.

ஆரியக் கூத்தானாலும் காரியத்தில் கண்ணாயிருந்தாள் நிலமொழி.

தன் அணியில் உறுப்பினர்களை துவாரகியே தெரிந்து எடுக்கலாம் என்ற சுதந்திரத்தில் அணிகளிடையே தேடியெடுத்திருந்த இருவர் தான் நிலமொழியும் கவியரசியும்.

ஆளுமையுள்ள துடிதுடிப்பான செயற்றிறன் மிக்க வீராங்கனைகளாக அவர்கள் இருந்தார்கள்.

” உன்னோட அக்கா எங்க இருக்கிறாங்கள்?”

துவாரகி ஆர்வமானால் இப்போது.அவளுக்கு தன் குடும்பத்தின் நினைவு வந்திருக்க வேண்டும்.

சூரியக்கதிர் நடவடிக்கையில் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருந்த போது செல்லடியில் குடும்பத்தை மொத்தமா பறிகொடுத்தவள் துவாரகி.

செஞ்சோலையில இருந்து வளர்ந்தவள் பெரியவளானதும் தன்னையும் விடுதலை வேள்வியில் இணைத்துக் கொண்டிருந்தாள்.

” கொடிகாமத்தில தான்.அது அத்தான்ர ஊரக்கா”

நிலமொழியின் பேச்சால் நினைவு மீண்டு வந்தவள்

” அக்கா திருமணம் செய்திட்டா என. அம்மா எங்க அக்காவோடயா? ”

” இல்லை”

” அப்ப எங்க?”

” அப்பாட்ட போய்டா”

” என்ன?”

கேள்வி பட்டென சுட்டது.இருந்தும் அதன் பின்னர் சில நொடிகள் யாரும் பேசிக்கொள்ளவில்லை.

துவாரகி உற்று நோக்கினாள்; நிலமொழியின் கண்களை.

எந்த கலக்கமும் இல்லாமல் இயல்பாக அமைதியாகவே அவள் இருந்தாள்.

கையில் இருந்த கருவியை தன்னோடு அணைத்தபடி.அதன் பட்டி அவளது தலையைத் தாண்டி அடுத்த தோளில் படிந்திருந்தது.

” என்ன நிலமொழி.உனக்கு கவலையாக இல்லையா?”

” இருந்திச்சக்கா.”

“இப்பவும் இருக்கு.”

“ஆனாலும் எனக்கெண்டு யாராச்சும் இருந்து, அதை நான் சொல்ல கேட்டு, எனக்கு ஆதரவாக இருந்தால் தானே, இருக்கிற கவலைக்கு உயிர்ப்பிருக்கும்.”

வார்த்தையில் வலி கலந்த உணர்வுகளினை கலந்து உதிர்ந்திருந்தாள் நிலமொழி.

துவாரகியின் கண்களில் நீர் கசிந்தது.

சூழலின் தன்மை ஒலிகளால் குழப்பமடைந்தது. இருந்த குப்பி விளக்கை அணைத்து விட்டு இருந்த இடத்தில் பரவியிருந்த தன் உடைமைகளை உடல் பைகளில் எடுத்து வைத்துக் கொண்டாள் துவாரகி.

” அக்கா.”

“கவியரசியக்காவை எழுப்பவா?”

” வேண்டாம்.”

“நாங்கள் பாப்போம்.நிலைமை மோசமானால் எழுப்புவோம்.”

சத்தம் வானில் இருந்து வருவதை உணர்ந்து கொண்டனர்.

“வண்டு வருகுது. நடமாட்டத்தை குறைக்க வேண்டும்.மரத்துக்கு கீழவே நில்லும்.
நிலவில அசைவு தெரியலாம்.”

ஒரு முன்னெச்சரிக்கை உணர்வு மேலிட துவாரகி நிலமொழிக்கு சொன்னவாறே மரத்தை விட்டு இறங்கினாள்.

அன்று பௌர்னமி.முழு நிலா வரவுக்காலம்.நிலவு உச்சிக்கு ஏறி மேற்கே இறங்கிக் கொண்டிருந்தது.நிலமெல்லாம் நல்ல நிலவொளி.அந்த ஒளியில் புத்தகம் படிக்கலாம். எழுத்துக்கள் நன்றாகவே தெரியும்.

மரக்கிளைகளினுள் அமைத்திருந்த பரனில் கிளைகளால் ஒரு கூடாரம் அமைத்திருந்தனர்.ஒளி கூட மட்டாகத் தான் உள் வருமளவுக்கு.

” அக்கா சத்தம் அக்கால போகுது.போட்டான் போல”

” ஓம்.இந்த பாதையால அவன் நித்தம் போறவன் போல.”

தன் நட்குறிப்பேட்டை எடுத்தாள் துவாரகி.

” என்னக்கா?”

” நேரத்தை குறித்து வைக்க வேண்டும்.இதுகள் போல் சில குறிப்புக்கள் பின்னுக்கு உதவும்.”

என்றவாறே தன் கையை திருப்பி கவுட்டு கட்டிய மணிக்கூட்டு முகப்பை திருப்பி பார்த்தாள் நேரத்தை .

” அப்பாடியோ? மூன்று மணியாச்சு.”

“நிலமொழி நீங்கள் போய் போடுங்கோ?”

நிலமொழியின் காவல் கடமை நேரம் மூன்று மணியோட முடிந்து விடும்.

மூன்று பேர் மட்டுமே உள்ள அந்த அவதானிப்பு நிலையத்தில் ஒருவர் மாறி ஒருவர் காவல் கடமையில் இருந்தாக வேண்டும்.

பாதுகாப்பு விடயத்தில் துவாரகி கண்டிப்பானவள்.

மூன்று மணியில இருந்து ஆறு மணிவரை கவியரசியின் காவல் கடமை.நிலமொழி கவியரசியை எழுப்பி விட போனாள்.

” வேண்டாம் நிலமொழி.நான் பாக்கிறேன்.” என்றாள் துவாரகி.

ஏன் எனக் கேட்க எண்ணியவள் கேட்காது கேட்பது போல் உடல் மொழியினை வெளிப்படுத்தினாள்.

கூடாரத்துக்குள் வந்த கொஞ்ச நிலவொளியில் அவளது குறிப்புணர்வை அவதானித்த துவாரகி

” அவள் நீண்ட நேரம் என்னோட வரைபட வேலையில இருந்தவள்.களைச்சுப் போயிருப்பாள்.போர்வை போத்தி படுத்து கன நாளாம்.இன்டைக்கு படுக்கிறன் என்டவள்.அதான் நான் பாக்கிறன்.”

துவாரகியின் அணிக்கு வந்து சில நாட்கள் தான் ஆன போதும் துவாரகியின் இயல்புகளை நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள் நிலமொழி.

இருந்தும் அவளை இப்படி;பல நேரங்களில் வியப்பில் ஆழ்த்தி விடுவாள் துவாரகி.

கவியரசியை பார்த்த நிலமொழி

” இந்தமாதிரி ஒரு உறவு இங்காவது கிடைக்கிறதே! ”

என்று தனக்குள் எண்ணிக் கொண்டவாறே படுக்கைக்கு ஆயத்தமானாள்.

கவியரசிக்கு அவளது வீட்டில் இருந்து உடுப்புக்களோடு போர்வையும் வந்திருந்தது.

முன்னரங்கில் இருந்தால் போர்வை நித்திரைக்கு சாத்தியம் குறைவு.துவாரகியின் அணிக்கு மாறியதும் அது தாராளமாகவே இருந்தது. எதிரியின் குகைக்குள்ளும் அது அப்பப்போ அவளுக்கு கிடைத்திருந்தது.

நிலமொழிக்கு போர்வையோடு உடுப்புக்களை கொடுத்துவிட அம்மா இல்லை. நிலமொழியின் மனதில் அலைமோதியது நிகழ்வுகளின் நினைவுகள்.

கவியரசிக்கு அருகில் அமர்ந்தவளை

” நிலமொழி”

” ஓமக்கா”

கீழே நின்று அழைத்த துவாரகியின் அழைப்புக்கு குரல் கொடுத்தவாறே எட்டிப் பார்த்து

” வாறதாக்கா” என்றாள்.

” வேண்டாம்.”

“இந்தாங்கோ.உங்களுக்கும் போர்வையிருக்கு.”

நிலமொழிக்கு தன் அம்மாவைப் பார்த்து போல இருந்தது துவாரகி போர்வையை எடுத்து கொடுக்கும் போது.

அம்மா தான் போர்த்தி விடுவாள் நிலமொழி படுக்கும் போது.நித்திரையாகும் வரை அவள் அம்மாவை கட்டிப்பிடித்தபடி தான் படுத்திருப்பாள்.

வீட்டில் நிலமொழி கடைக்குட்டி.அப்பாவோட செல்லம்.கூடவே அம்மோவோட செல்லமும்.அக்கா அவளுக்கு இன்னொரு அம்மா மாதிரி.

இழப்புக்களின் வலி தந்த வெறுப்பு வாழ்வியல் சுகங்களை துறந்து போராடத் தூண்டிவிட்டது நிலமொழியை.

” என்ன நிலமொழி?”

“இந்தாங்கோ பிடியுங்கோ!”

துவாரகியின் குரலில் நினைவுகள் கலைந்திட சுயநினைவுக்கு திரும்பிக் கொண்டாள்.

போர்வையை எட்டி வாங்கிக் கொண்டாள்.

இப்போது தான் நிலமொழியின் கண்கள் பனித்துக்கொண்டன.அவளது கவலைகளும் உயிர்த்துக் கொண்டன.

-நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More